பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

நெடுந் தொகை தொகுத்தவர், முதல் நூற்றிருபது பாடல்களைச் சீர்செய்து முதல் பாகம் என்னும் வறட்டுப் பெயருக்குப் பதிலாகக் 'களிற்றியானை நிரை' எனவும், அடுத்த நூற்றெண்பது பாடல்களை ஒழுங்கு செய்து இரண்டாம் பாகம் என்னும் வெறும் பெயருக்குப் பதிலாக ‘மணிமிடை பவளம்’ எனவும், இறுதி நூறு பாடல்களை அணிசெய்து மூன்றாம் பாகம் என்னும் சுவையற்ற பெயருக்குப் பதிலாக 'நித்திலக் கோவை’ எனவும் பெயர் வழங்கியுள்ளார். நானூறு பாடல்களையும் அலுப்பு சலிப்பின்றி இடைவெளி தந்து படிப்பதற்கும், சுவடியை எளிதாகக் கையாள்வதற்கும் இந்தப் பிரிவினை வசதி செய்கிறது. இந்த மூன்று பிரிவுகளையும் மூன்று தனித்தொகை நூல்களாகக் கருதியவர் போல, நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் பல இடங்களில் இம்மூன்று பெயர்களையும் விதந்து குறிப்பிட்டுள்ளார். நெடுந்தொகையை மூன்றாகப் பகுத்ததுகூடப் பெரிதில்லை; மூன்றுக்கும் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்னும் எடுப்பான கவர்ச்சியான இனிய அழகிய பெயர்களை வழங்கியிருப்பது ஒரு பெரிய கலைக்கூறு ஆகும்.

தொகுப்பாளரும் காலமும்:

நெடுந் தொகையைப் பாண்டியர் அவையிலே சங்கப் புலவர் தொகுத்ததாக நெடுந்தொகைப் பாயிரச் செய்யுள் கூறுகிறது. அச்செய்யுளின் அடியிலுள்ள உரைநடைப் பகுதியில், ‘தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி; தொகுத்தான் உருத்திர சன்மன், எனக் கூறப்பட்டுள்ளது. பேராசிரியரும் (தொல்-செய்யுளியல்-149உரை), நச்சினார்க் கினியரும் (மலைபடு கடாம்-உரை), தொகை நூல்களைச் சங்கத்தார் தொகுத்ததாகப் பொது வாகக் கூறியுள்ளனர். இதனால் அறியப் படுவதாவது,-