11
கற்பனையும் கலந்திருந்தாலும், நாம் நயந்து மகிழத்தக்க நயங்களும் இப்பகுதியில் மிகவும் உண்டு. மனைவியைப் பேணிக் காக்கவேண்டும் என்பதில் ஆண் அன்னத்திற்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் விரைவும் நமக்குப் புலப்படுமே!
அயர்ந்து விளையாடிய:
இப்பாடல் பகுதியி லுள்ள அயர்ந்து விளையாடிய’ என்னும் தொடரை நோக்குக. அயர்ந்து என்றால். மெய்ம் மறந்து-தன்னை மறந்து என்று பொருளன்றோ? தன்னை மறந்த அயர்ச்சியால் பெடை தாமரை மலர்க்குள் அகப்பட்டுக் கொண்டது-பெடை அயர்ந்திருந்த நேரம் பார்த்துத் தாமரை அதை அடக்கிக்கொண்டது- என்னும் கருத்து நயம் 'அயர்ந்து’ என்னும் சொல்லாட்சியிலிருந்து கிடைக்கின்றது. அசர்ந்திருந்த நேரம் பார்த்து அடித்துக் கொண்டு போய் விட்டான்’ என்னும் உலக வழக்கு ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. மற்றும், விளையாட்டுத் தனமாய் இருந்தால் 'வினை' நேர்ந்து போகும் என்னும் கருத்தை ‘விளையாடிய’ என்னும் சொல் அறிவித்துக்கொண்டிருப்பது சுவைத்தற்கு இன்பமா யுள்ளது.
தன்னுறு பெடை:
அடுத்து, ‘தன்னுறு பெடை’ என்னும் தொடரை நோக்குவாம்: ‘தனக்கு உற்ற மனைவி’ என்பது அதற்குப் பொருளன்றோ? உற்ற மனைவி என்பதில், மனையாளுக்கு இருக்க வேண்டிய பேரிலக்கணங்கள் அத்தனையும் அடங்கிவிட வில்லையா? மக்களுக்குள் ஒருவர்க்கு உற்றவர் ஒருவரே-பலரல்லர் என்னும் கற்புடைமை போல அன்னங்களுக்குக் குள்ளும், ஒன்றுக்கு உற்றது ஒன்றேதனக்குத் தனக்குஉரிய ஆணையோ அல்லது பெண்ணையோ