பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கிறார்; சங்கு கொண்டு வெற்றி ஊதுகிறார்-இதை உலகத்துக்கு எல்லாம் எடுத்து ஓதுகிறார். பாடல் பகுதி வருமாறு:-

‘ஆடு வோமே-பள்ளுப் பாடு வோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடு வோமே பள்ளுப் பாடு வோமே!
சங்கு கொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக் கெல்லாம் எடுத்து ஓது வோமே!”

விடுதலை கிடைப்பத்ற்கு முன்பே கிடைத்து விட்டதாகப் பாடியிருக்கும் இப்பாடல் பற்றிச் சிலர் வியப்பு அடைகின்றனர்; இவ்வாறு பாடலாமா என்றுகூட எண்ணுகின்றனர். இஃது ஒரு சார் இலக்கிய மரபு.

தொல்காப்பியப் புறத்திணையியலில், "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" (12) என ஒரு துறை உள்ளது. “பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி” என இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். தொடர்ந்து உரையாசிரியர், “கழிந்தது பொழிந்தென”. என்னும் புறப்பாட்டினுள், ‘ஒன்னார் ஆரெயில் அவர்கட்டாகவும் நூமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளி யோய் (203) என்பதும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என விளக்கம் தந்துள்ளார்.

இளஞ் சேட் சென்னி என்னும் மன்னன், பகைவரது ஊரை வெல்லும் முன்பே, பாணர்க்குப் பரிசாக அளிப்பான் என்னும் செய்தி மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடலில் அமைந்துள்ளது. இராமன் இலங்கையை வெல்லும் முன்பே,