பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

 தவிர, வேறொன்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்னும் ஒழுங்கு நெறிக் கட்டுப்பாடு உண்டு என்பதை இந்தத் தன்னுறு பெடை’ என்னும் தொடர் அறிவிக்கின்றது,

அடக்க:

தொடர்ந்து, 'தாமரை அடக்க' என்பதிலுள்ள அடக்க என்னும் சொல்லைக் காண்க. ‘ஒருவனுக்கு உரியதை இன்னொருவன் அகப்படுத்தி அடக்கிக் கொண்டான்’ என்னும் உலக வழக்குப் பேச்சு ஈண்டு நினைவுக்கு வருகின்றது.சேவலுக்கு உரிய பெடையைத் தாமரை தனக்கு உரியதாக அடக்கிக் கொண்டது என்பது போன்ற குறிப்பு ஈண்டு நயமாயுள்ளது.

சிதையக் கிழித்து:

உடனே சேவல் என்ன செய்தது? இங்கே, 'பூம் பொதி சிதையக் கிழித்து’ என்னும் தொடர் பொருள் பொதிந்தது. ஒருவன் மனைவியை இன்னொருவன் அகப்படுத்திக் கொண்டு ஒரு கூரைக்குள்ளே-ஒரு கூடாரத்திற்குள்ளே பூட்டி அடைத்துவிடின், கணவன், பூட்டைத் திறப்பது எப்படி யென்று பொறுமையாகக் காத்துக் கொண்டா இருப்பான்? கூரையை-கூடாரத்தைக் கண்டபடி விரைந்து பிய்த்து இழுத்து எறிந்துவிட்டு மனைவியை மீட்கவே முயல்வா னன்றோ? அவ்வாறே, அன்னச் சேவலும், குவிந்து மூடிய தாமரை மலரின் ஒவ்வோர் இதழையும் பொறுமையாகத் திறந்துவிட்டுக்கொண் டிராமல், அம் மலர் கண்டபடி சிதைந்து அழியும் படியாக விரைந்து கிழித்துப் பிய்த்தெறிந்து விட்டுப் பெடையை மீட்டதுஎன்னும் பொருள் பொதிந்த அந்தத்தொடர் மிகவும் நயத்தற் குரியது.