பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தால் இப்பெயர்க் காரணமும் பொருந்தாது - என்று மறுப்பர் வேறொரு சாரார். எது எப்படியிருப்பினும், பல்வேறு உறுப்புகளும் பல்வேறு வகைப் பாடல்களும் கொண்டு தெவிட்டாதபடி மாறி மாறிக் கலவிச் சுவையளிக்கும் ஒரு வகைக் கலவை இலக்கியம் கலம்பகம் என்பது உண்மை யான உறுதியான கருத்து.

நூலின் தனிப்பெருஞ் சிறப்பு:

மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப்பட்ட கலம்பகம் ஆதலின் இது சுருக்கமாக நந்திக் கலம்பகம் என அழைக்கப்படுகிறது. இந்நூலின் சிறப்புகளுள் ஒரு மூன்றினைத் தலையாய தனிப் பெருஞ் சிறப்புகளாகக் கூறலாம். அவையாவன:

ஒன்று: நந்திக் கலம்பகம் இதுவரைகிடைத்திருக்கும் கலம்பகங்கட்குள்ளேயே காலத்தால் முற்பட்டது.

இரண்டு: அரசன்மேல் பாடப்பட்டுள்ள கலம்பகம் தமிழிலேயே இஃது ஒன்று தான். மற்றவை கடவுள் மேலும் கடவுளடியார் மேலும் பாடபட்டவையாம்.

மூன்றாவதாக, மற்ற கலம்பக நூல்கள் எல்லாம் இலக்கியச் சுவையோடு சரி. இந்த நந்திக் கலம்பகமோ இலக்கியச் சுவை நுகர்ச்சியளிப்பதுடன் நாட்டுவரலாறும் அறிவிக்கிறது.

காலம்:

ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த மூன்றாம் நந்தி வர்மப் பல்லவ வேந்தன் மேல் பாடப்பட்டதாதலின், இக்கலம்பகத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது புலனாகும். மூன்றாம்நந்திவர்ம-