பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


பொருளியல் பகுதி

15. கோடீசுவரர் ஆகவேண்டுமா?

நம் பாட்டன். பூட்டன் காலத்தில் ஆயிரம் உரூபா பெறுமானம் உள்ள உடைமைக்கு உரியவர் பெரிய பணக்காரராக மதிக்கப் பெற்றார். நாளடைவில் ஆயிரக்கணக்கு போய், பதினாயிரக் கணக்கில் உடையவரே பெருஞ் செல்வராகக் கருதப் பெற்றார். இந்த அளவும் மதிப்பு இழந்து போக, நம் காலத்தில் நூறாயிரக் (இலட்சக்) கணக்கில் பொருள் உடையவரே பெருஞ் செல்வராக மதிக்கப் பெறுகிறார்-அதாவது, இலட்சாதிபதி எனப் போற்றப் பெறுகிறார். இப்போது இந்த அளவும் அடிபட்டு விட்டதாகத் தெரிகிறது. கோடிக் கணக்கில் பொருள் உடையவரே இனிச் செல்வர் என்னும் பெயர் பெற முடியும். இது இன்றைய நம் நாட்டுச் சூழ்நிலை, அயல் நாடுகள் சிலவற்றில் கோடீசுவரர்கள் என்றோ பெருகி விட்டனர்.

இலட்சத்திற்கு உரியவர்கள் அதிபதி அதாவது அரசர் (இலட்சாதிபதி) என்னும் பெருமைக்கு உரியவராகக் கருதப் பட்டனர். கோடிக்கு உரியவரோ, ஈசுவரர்” அதாவது ‘கடவுளர்’ (கோடி- ஈசுவரர்=கோடீசுவரர்) என்னும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

உலகில் தாம் கோடீசுவரர் ஆகவேண்டும் என விரும்பாதவர் எவரும் இலர் என்று அடியேன் அடித்துக் கூறுவேனேயாயின், ஒரு சிலர் என்மேல் சினம் கொள்ளக் கூடும். எனவே, தாம் கோடீசுவரர் ஆகவேண்டும் என விரும்பாதவர் ஒரு சிலரே என்றாவது கூறி அடியேன் தப்பித்துக் கொள்ளும் வழியைப் பார்க்கவேண்டும்.