பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தரை மட்டத்தில் தாழ்ந்து குறுகியுள்ள சிறுவகை மரஞ் செடி கொடிகளையும் விட்டு, ஓங்கி வளர்ந்துள்ள பெரிய தென்னை மரத்தின் உயரமான மடலில் ஏறிக்கொண்ட னவாம். உண்மை தானே! இப்பகுதி சுவைப்பதற்கு.மிகவும் இனியது. சுவைப்பாம்:

ஓங்கு இருந் தெங்கு:

தாமரை மலரின் தகாத செயலால் தவித்துப் போன அந்த அன்னங்கள், தாமரைத் தடாகத்தை விட்டு உயரமான ஓரிடத்தில் ஏறிக்கொண்டன. ஈண்டு காவியப் புலவர் சாத்தனார், அன்னங்கள் ஏறிக்கொண்ட மரத்தின் உயரத்தை மிகுதிப் படுத்திக் கூறல் என்னும் அளவு கருவியின் வாயிலாக, பறவைகள் தாமரைத் தடாகத்தின் மேல் கொண்டிருந்த அச்சத்தின் மிகுதியை நமக்கு அளந்து காட்டியுள்ளார். தெங்கு (தென்னை) என்று சொன்னாலே போதும்-அது மிகவும் உயரமான பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும். உலக வழக்கில் கூட, மிகவும் உயரமாயிருப்பவனைப் பார்த்து, 'தென்னைமரம்போல் வளர்ந்து விட்டான்’ என்று சொல்கின்றனரல்லவா? சாத்தனாரே, (ஒங்கு தெங்கு-இரும் தெங்கு) ஒங்கு இரும் தெங்கு என இரண்டு அடைமொழிகளின் வாயிலாக அம்மரத்தின் உயரத்தை மேலும் மிகுதிப் படுத்திக் காட்டுகிறார். அதாவது, இயற்கையிலேயே உயரமாயிருக்கிற தென்னை மரங்களுக்குள்ளேயே அந்த மரம் ஓங்கிய மரமாம்- இரும் (பெரிய) மரமாம். 'இரும்’ என்றால் 'பெரிய' என்று பொருளாம். இங்கே பெரியது என்பதும் உயரத்தைக் கொண்டுதானே! எனவே, மிகவும் உயர்ந்த மரம் என்பதுபோதரும்.