பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

நேரங்காட்டி:

இக்கருத்துக்கு ஆதரவு அளிக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே மறப்பதற்கில்லை: சூரிய காந்தி சூரியனைநோக்கிச் சாய்ந்து திரும்புவதைக் கொண்டு நேரத்தையும் (கால மணியையும்) ஒருவாறு உய்த்துணர்ந்து வந்த நம் முன்னோர், இதற்கு ‘நேரம் காட்டி’ என்னும் பெயரையும் சூட்டியுள்ளனர். இப்பெயரை, பச்சிலை மூலிகைச் சித்த மருத்துவ அகராதியிலும், சாம்ப சிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகர முதலியிலும் இன்ன பிறவற்றிலும் காணலாம்.

எனவே, சூரிய காந்தி, ஓர் இயற்கை மணி காட்டியாகவும் பண்டு பயன்பட்டு வந்தது என்று கூறலாம் அல்லவா? இனி, சூரியகாந்தியை நோக்கிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள பாடல் பகுதிகளைக் காண்போம்:

“காயும் கதிரவன் மேனியை நோக்கி-உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?’’

“செங்கதிர் செல்லும் திசையது நோக்கி-உன்
செல்வ முகமும் திரும்புவ தேன்?”

“உன்பெயர் சூரிய காந்தி யென்றார்.அதன்
உண்மையும் இன்றே அறிந்து கொண்டோம்”

(நூல்: மலரும் மாலையும்-தலைப்பு 49. சூரிய காந்தி).

நெருஞ்சி:

சூரியகாந்தியைப் போலவே நெருஞ்சியும் சூரியனை நோக்கித் திரும்புவதாகும். நெருஞ்சியைச் சூரிய காந்தியின் எட்டின தூரத்துப் பங்காளி என்று கூறலாம். சூரிய