பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

கலை நுட்பக் கருத்துக்கள்:

(21) உவமம் பற்றி இன்னும் எத்தனையோ கலை நுட்பக் கருத்துக்கள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

உவமை கூறுவதாயின் உண்மையான ஒப்புமைப் பொருத்தம் இருத்தல் வேண்டும். சொல்லவந்த பொருளை விட ஒப்புமை உயர்ந்ததாக இருக்கவேண்டும். உலக வழக்கை யொட்டி ஒரு பொருளை உவமையின் வாயிலாக மிகவும் பெரிது படுத்தவும்-சிறிது படுத்தவும் செய்யலாம். வெளிப்படையாகக் கூறாவிடினும், ஒப்புமைப் பொருளுக்கு உரிய தன்மைகளை யெல்லாம் சொல்லவந்தபொருளுக்கும் ஏற்றிக்கொள்ளவேண்டும். தாமரை போன்ற முகம் என்று கூறும் வழக்கத்தை மாற்றி, முகம் போன்ற தாமரை என்று கூறியும் பொருளுக்குப் பெருமை யளிக்கலாம். முகத்தைத் தாமரை ஒவ்வாது- அவ்வளவு உயர்ந்த முகம் என மறுத்துக் கூறியும் வேடிக்கை செய்யலாம். பாரி பாரி என்று பாரியையே புலவர்கள் புகழ்கின்றனரே-மாரியைப் (மழை யைப்) புகழவில்லையே-என மறைமுகமாகவும் பாரிக்கு மாரியைச் சுவைபெற உவமிக்கலாம்.

உவம உருபுகள்:

(22) புலி யன்ன மறவன், பொன் போன்ற மேனி! என உவமையையும் பொருளையும் பாலமாக இணைக்கிற ‘அன்ன’, ‘போன்ற என்னும் ஒப்புமைச் சொற்களை “உவம உருபு என்பர். தொல்காப்பியர் இவற்றைப் போல் முப்பத்தாறு உருபுகள் கூறியுள்ளார்; இவ்வுருபுகளுள் இன்னின்னவை வினை, பயன், மெய், உரு ஆகிய உவமங்கட்குத் தனித்தனியே உரியவை எனப் பங்கும் பிரித்துள்ளார் இது, மிக மிக வளர்ச்சி பெற்ற ஒரு கலை நுட்பச் செய்தியாகும்,