பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

இருக்கலாம். ஆனாலும் என் தாய்க்கு ஆறுதல் ஏற்படவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாளாம். பாட்டியா சொல்லுவாள்? சொன்னால், அவர் இருக்கும் இடத்தைத் தேடி மகள் ஓடிவிட்டாலும் ஓடிவிடலாமல்லவா? அதோடு கூட, அந்த இளைஞரின் சொந்த வரலாறு பற்றி என் பாட்டிக்கும் சரியாகத் தெரியாதாம். இந்த நிலையில் புதுப்புது ஆட்களை அவள் ஏற்பாடு செய்தாளாம். வந்தவழியே எல்லோரையும் என் தாய் அனுப்பிவிட்டாளாம். அந்த முதல் இளைஞரை மணந்து கொண்டு குடும்பவாழ்க்கை நடத்தப் போகிறேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாளாம்".

"ஊம், பிறகு என்ன வாயிற்று?"

"இந்த ஊரிலேயே இருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அந்த இளைஞன் வந்தாலும் வரலாம்; அதனால் தன் மகள் அவனோடு போய்விடவுங்கூடும் என்று அஞ்சிப் பாட்டி ஊரை மாற்றிக் கொண்டாளாம். அதாவது, அந்த ஊரிலிருந்து இந்தச் சென்னைக்குக் குடியேறிவிட்டாளாம்”.

"முன்பு இருந்த ஊர் எது என்று நீ இன்னும் சொல்லவே யில்லையே!”

'ஓ, அதுவா! மறந்துவிட்டேன்-பெங்களுர்'

"பெங்களுரா..." சரி சரி, சென்னைக்கு வந்ததும் உன் தாய் என்ன ஆனாள்?’’

“இந்த ஊரிலே என்னைப் பெற்று விட்டு இறந்து போனாள்.

"ஏதோ தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னாயே”.