30
பெரும்பாலும் பெண்களும் ஆண்களுள் முதியோர்களுமாவர். இலக்கிய மேடைத் தமிழைக் கேட்க வருபவரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவு இன்று மிகவும் சுருங்கிவிட்டது; ஆனால், மேடையில் உரக்கக் கத்திப் பேசி ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்யும் இலக்கியப் பேச்சாளர் சிலருக்குக் கூட்டம் சேர்கிறது. இது வேடிக்கை பார்க்கும் கூட்டமாகும்.
காலம் சென்றவர்களாகிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளார், சோம சுந்தர பாரதியார், மறை மலை அடிகளார், திரு.வி. கலியாண சுந்தரனார், ந.மு வேங்கடசாமி நாட்டார், பண்டித மணி மு.கதிரேசச் செட்டியார் போன்றோர் பேசிய மேடைத் தமிழ் அன்று பலராலும் மிகவும் சுவைக்கப்பட்டது. இவர்களைப் போல இலக்கியத் தமிழ் பேசுபவர்கள் இன்று மிகவும் குறைவு. கூட்டம் சேரவேண்டும் எனின், திரையோவியத் (சினிமா) தொடர்புடையவர்களை அழைக்க வேண்டும்.
ஏறக்குறைய இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு மேடைத் தமிழ்வானிலே ஒரு புதிய விண்மீன் முளைத்தது. ஐம்பதாண்டு காலம் அது புத்தொளி விசிப்பொலிந்தது. அறிஞர் சி. என். அண்ணாதுரையவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். எதுகை மோனையுடன் கூடிய அடுக்கு மொழித் தமிழில் கவர்ச்சியான கருத்துகளை அமைத்து அணிபெறச் சுவையுடன் சொற்பொழிவாற்றி வந்தார் அவர். அந்தச் சொற்பெருக்கு மழையில் பலதரத்தவரும் அகமகிழ்ந்து குளித்து நனைந்து குளிர்ச்சி எய்தினர். அவர்களுள் இளையோரே பெரும்பாலராவர்.
மேடைத் தமிழ் சார்பான மக்கள் மனப்பாங்கை
உரைத்துப் பார்க்க, அறிஞர் அண்ணா துரையவர்கள் பேசி வந்த மேடைத்தமிழை உரைகல்லாகக் கொள்ளலாம்.