பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

-புதிய முறையில் வளரக் கூடியது என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொள்வர். பேச்சுத் தமிழ் ஒருவரை நேரில் பார்ப்பது போன்றது. எழுத்துத் தமிழோ, அவரை அவரது புகைப்படத்தில் காண்பது போன்றது. எனவே, எழுத்துத் தமிழைப் படிக்கும்போது உள்ள மனப்பாங்கிற்கும், பேச்சுத் தமிழைக் கேட்கும் போது உள்ள மனப்பாங்கிற்கும் வேற்றுமை இருப்பது இயல்பு. ஒரே அறிஞரது எழுத்தைப் படிக்கும்போது இருக்கும் மனப் பாங்கினும், அவரது பேச்சைக் கேட்கும்போது இருக்கும் மனப்பாங்கு வேறுபடலாம்.

எனவே, எழுத்துத் தமிழுக்கு-இலக்கியத்தமிழுக்குக் கடைப்பிடிக்கும் அத்தனையளவு இலக்கண விதிமுறைகளைப் பேச்சுத் தமிழுக்கும்-அதிலும் மேடைப் பேச்சுத் தமிழுக்கும் பின்பற்றுவதை மக்கள் மனப்பாங்கு அவ்வளவாக விரும்புவதில்லை. மாறாக, வெறுக்கும் மனங்களும். கசக்கும் உள்ளங்களும் கூட உண்டு. அதனால், மேடைத் தமிழைக் கண்டபடி கொச்சையாக_தரக் குறைவாகப் பேசலாம் என்பது பொருள் இல்லை. உரையாடும் தமிழின் எளிமைக்கும் இலக்கியத் தமிழின் அருமைக்கும் இடைப்பட்டதான ஒரு வகை நடுத்தர நடையை மேடைத்தமிழில் பின்பற்றுவது வரவேற்கத் தக்கதாகும். இலக்கியத் தமிழ்ச் சுவைஞர்க்கும் இது பிடிக்கலாம்; எளிய தமிழ்நடைச் சுவைஞர்க்கும் இது பிடிக்கலாம். இயற்கையாகப் பிடிக்க வில்லையாயினும், நடுத்தர நடையில் அனைவரது மேடைப் பேச்சும் அமையுமாயின், அனைத்து மக்களும் அந்தத் தமிழ் நடையினைக் கேட்டுச் சுவைக்க நாளடைவில் பழகிவிடுவர்.

எனவே, பலதரப்பட்ட மக்கள் நிறைந்த கூட்டத்திலே பேசும் மேடைத் தமிழ், பல்வேறு வகை மனப்பாங்