35
அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று ஒளவையாரும் மொழிந்துள்ளபடி, இடத்தினால் மக்களுக்குப் பெருமையில்லை. பிறந்து வாழும் உயர்ந்த மக்களாலேயே இடத்திற்குப் பெருமை ஏற்படும். இந்தப் பொது உண்மைக்குப் புதுச்சேரியும் உட்பட்டதே.
புதுச்சேரிக்கு நிலையான பெருமையளித்தவர்களுள் தலையானவர்கள் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஆவர். புதிய புதுவை. உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டளவில், புதுவை வளர்த்த புலவர்களுள், காலத்தாலும் தகுதியாலும் ஒருசேர முதன்மையானவர் பு.அ.பெரியசாமிப் பிள்ளையே. பெரிய புரட்சிக்காரர்களான சுப்பிரமணிய பாரதியார், வ.வெ.சு. ஐயர் முதலானவர்கள், பெரியசாமிப்பிள்ளை தலைமை தாங்கி நடத்திய கலைமகள் கழகத்தின் உறுப்பினர்கள். பாவேந்தர் பாரதிதாசனோ பெரியசாமிப்பிள்ளையின் மாணாக்கர். இன்ன பிற செய்திகளைக் கொண்டு பெரியசாமிப் பிள்ளையை நம் உள்ளத்திரையில் ஒவியப்படுத்திக் கொள்ளலாம்.
தோற்றம்:
பெரியசாமிப் பிள்ளை புதுவை நகருக்கு மேற்கே ஒரு கல் தொலைவிலுள்ள குயப்பாளையம் என்னும் ஊரில் கி.பி. 1843 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் அப்பாசாமிப்பிள்ளை; தாயார் பூரணி அம்மா,
கல்வி:
இவர் இளமையில், புதுவை அம்பலத்தாடையர் மடத்தின் தலைவராய்ச் சின்னாள் விளங்கிய நாகலிங்க அடிகளாரிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நன்கு தெளிவுறக்கற்றார். தம் ஓயாத உறுதியான சொந்த