பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

கற்பிக்கும் கலை மன்னர்:

புலவர் பெரியசாமி கற்பிக்கும் கலையில் பெருமன்னராய்த் திகழ்ந்ததாகப் பாராட்டப்படுகிறார். வாய் திறந்து ஒருசில சொற்கள் சொல்வதற்கே பணம் எதிர்பார்க்கும் இவ்வுலகில், இவர் பணமின்றியே பல மணி நேரம் அன்புடனும் இன்முகத்துடனும் பாடம் கற்பித்தாராம். மாணாக்கராக இளைத்துக் களைத்தால்தான் பாடம் நிற்குமே தவிர, புலவர் தம் களைப்பினிமித்தம் பாடத்தை நிறுத்துவ தில்லையாம். வைகறை நான்கு மணிக்கேகூடச் சிலருக்குப் பாடம் சொல்லிய துண்டாம். மாணாக்கர்கள் திண்ணையில் அமர்ந்து பாடம் கேட்க, தாம் எள் துழவிக் கொண்டும்-நெல் துழவிக் கொண்டுங்கூடப்பாடம் சொல்லுவாராம். எள்ளும் நெல்லும் துழவும் போதும் பாடத்தை நிறுத்தாத ஆர்வத்தை - அக்கறையை என்னென்று புகழ்வது !

பாராட்டு:

புலவர் அவர்கள் பாடங் 'கற்பித்த சிறப்பினைப் பற்றித் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார் பின் வருமாறு பாராட்டினார்களாம்:

“இந்நல்லாசிரியர் தம்மையடுத்து வாசிக்க வருபவர் பால் பொருள் ஒரு காசும் பெறுவதில்லை; அவர்கள் தம்மைப்போல் படித்துச் சிறந்த புலவர்களாகவேண்டும் என்ற அவ்வொரு விருப்பமே பொருளாகக் கொண்டதாலேயே இங்குப் பலர் பாட்டெழுதும் பாவலராகக் காணப் படுகின்றனர்" -இது ஞானியாரின் பாராட்டு.

புலமைப் பரப்பு:

ஞானியார் அடிகளின் பாராட்டேயன்றி, பல்வேறு வெளியூர்களில் வாழ்ந்த இருபதின்மருக்கும் மேற்பட்ட