உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


சாற்றுவது மற்றொர்முறை சாற்றுமோ கீர்த்தியைச்
     சாரிமய மலையில் வைத்துச்
சாமியும் பொறுமையைப் பூமிக்க ளித்தின்சொல்
     சந்தக் குயிற்க ணிட்டுச் -
சகக்கடை வரைப்பெரிய சாமியாம் பெயர்நிறுவித்
     தாணுவடி வெய்தி னிரே".

இப்பாடல், அன்று மிகவும் இளைஞராயிருந்த பாரதி தாசனது புலமையின் கற்பனை வளத்தை அறிவிப்பதோடு, பெரியசாமிப் பிள்ளையின் மாபெரும் புலமைச் சிறப்பையும் உயர்பண்பையும் ஒருசேர அறிவிக்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமே!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறி:

பெரியசாமிப் பிள்ளையோடு அவர் குடும்பத்தில் புலமையின் ஊற்று அடைபட்டுவிடவில்லை. அவர்தம் ஒரே மைந்தராகிய வைத்தியலிங்கம் பிள்ளையும் சிறந்த புலவராய் விளங்கினார். இவர் பல பதிகங்களும் தனிப் பாக்களும் பாடியுள்ளார். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாமே!’

தமிழ்மணம் -

யான் எழுதியுள்ள 'தமிழ் அகராதிக்கலை’ என்னும் நூலுக்கு வேண்டிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்தபோது, உரிச் சொல் நிகண்டு என்னும் நூலின் புதுவைப் பதிப்பு எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் எதிர்பாரா வகையில் பெரியசாமிப் பிள்ளையின் பேரர் வீட்டிலிருந்து அது கிடைத்தது. பிள்ளைக்கு ஒரு வகையில் பேரன் முறையுள்ள திருசோமசுந்தர ஆசிரியர் அதைத் தேடித் தந்தார். அக்குடும்பத்தில் இன்னும் தமிழ் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.


___________