56
‘முருகன் சேவடி வருடி உருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்கும் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்கும் திரு மேனியும், சண்முகா-சண்முகா என்று கூறி நீறளிக்கும் நீண்ட கையும் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஒவியம் எனப் படிந்து நிற்கிறது ...... அடிகளாரின் பேச்சுத் திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல் மடைத் திறப்புக்கா? வெண்கலக் கோட்டைக்குள் அரகவா (பட்டத்து யானை) புகுதலுக்கா? பெரும் புயலுக்கா? ஒயா மழைக்கா? எதற்கு-எதற்கு ஒப்பிடுவது?... ...”
“அடிகள் கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலையின் உச்சியில் - அதாவது மூளையில் -கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடு இல்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து அருள் அலை கொழித்துக் கொழித்து ஒடும்”......
திரு.வி.க.வின் சொல்நயம் பொருள் நயம் பொதிந்த உரை நடை அழகுக்கு இது போதாதா?இன்னும் சுவைக்க வேண்டுமா? சரி-இதோ தருகிறேன். திரு.வி.க.வின் இயற்கைப் புனைவு ஒன்றினைக் காண்போம். அவர் ஒரு சமயம் இலங்கையில் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் கண்ட இயற்கைக் காட்சிகளைப் புனைவு செய்து எழுதியுள்ளார். ஒரு சிறு பகுதி வருமாறு: