உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

'கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' என்னும் திருவாக்கில் போந்துள்ள 'கல்லார்’ என்பது, இயற்கை இறைக் கல்வி பெறாதாரைக் குறிப்பதென்க. ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்னும் மெய்ம் மொழி, ஏட்டுக்கல்வி பயின்று தகாத செயல் செய்வோரை நோக்கி எழுந்ததென்க".

இனி, தமிழ்த் தென்றல் முதலிய நூல்களிலிருந்து சில பகுதிகளைக் காணலாம். தமிழைப் பற்றிக் கூறியிருப்பதாவது:

"நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு-அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தம் கொண்டது இந்நாடு".

அடுத்துத் தொழில் துறையைப் பற்றிக் கூறியிருப்பதாவது: “ஆண்டவனே தொழிலாளியாயின், பின்னை எவன்தான் தொழிலாளியா யிருக்கமாட்டான்? தோட்டியும் தொழிலாளியே; தொண்டைமானும் தொழிலாளியே; நியாயாதிபதியும் தொழிலாளியே; வாயில் காப்போனும் தொழிலாளியே; உலகில் உள்ள அனைவரும் தொழிலாளரேயாவர்”.

பெண்ணுரிமை பற்றிய ஒரு பகுதி வருமாறு, "பெண்ணுக்கு உரிமை அருளிய என்னருமைத் தமிழ் நாடே! இது போழ்து யாண்டுளாய்-யாண்டுளாய் என்று அலமருகிறேன். அவ்வுரிமை நாட்டை மீண்டுங் காண எவர் முயலல் வேண்டும்? பெண் ஒரு பாதி; ஆண் மற்றொரு பாதி; இரண்டும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. அங்ஙனமாக, வாழ்வின் ஒரு பாதி உரிமை கடிவது எத்தகை அறியாமை:"