உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

இன்றியமையாதவர்கள் அல்லவா? அத்தகைய மாபெருஞ் சான்றோர்களின் வரிசையில் முன்னணியில் குறிப்பிடத் தக்கவர் ஈழம் ஈன்ற தமிழ்ப் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களாவார்.

தமிழகத்தில் தமிழ் ஒரளவு ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் திகழ்கின்ற இந்தக் காலத்திலுங் கூட, அச்சிட்ட உயரிய பழம்பெருந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை விரும்பிப் படிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்நூல்கள் அச்சிடப் படாமல் பனையோலைச் சுவடிகளிலேயே இருக்குமாயின், படிக்க முன்வருபவர் யாவர்? எத்துணையர்? இந்த இரங்கத்தக்க எளிய நிலையில் ஒருசிலராயினும் படிக்க உதவும் வகையில், பொருளைப் பொருட்படுத்தாது துணிந்து, பழம்பெருந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பனையோலையிலிருந்து தாளில் அச்சிட்டுத் தந்த முதல் பெருமை நம் மதிப்பிற்கு உரிய சி.வை. தாமோதரனா ருடையதாகும்.

தமிழில் தொல்காப்பியம், தொல்காப்பிய உரைகள், இறையனார் களவியல், வீரசோழியம், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி, தணிகைப் புர்ாணம், நீதிநெறி விளக்கம் முதலியவை மிக்க உயர்தரமுடைய இன்றி யமையாத நூல்கள் என்பதை நாம் அறிவோம். இந் நூல்களை முதல் முதலாக ஒலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்தவர் நம் தாமோதரம் பிள்ளையவர்களே. இவர் கி.பி. 1881ஆம் ஆண்டு வீரசோழியமும், 1883-இல் தணிகைப் புராணமும், 1885-இல் தொல்காப்பியமும், 1887-இல் கலித்தொகையும், 1889-இல் இலக்கண விளக்கமும் சூளாமணியும் அச்சில் பதிப்பித்தார். தொல் காப்பியத்தின் மூன்று பகுதிகளும் இவரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இது விலை மதிக்கவொண்ணாத தமிழ்த் தொண்டாகும்.