பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இங்கே, ‘தமிழ்த் தாத்தா' எனத் தமிழ் மக்களால் செல்லமாக அழைக்கப்பெறும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பதிப்பிலே உள்ள சிறப்பு என்ன? அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்புரையும், ஆராய்ச்சி முன்னுரையும், அடிக்குறிப்புகளுமே அவர்தம் பதிப்பிற்குச்சிறப்பு அளிப்பன வாகும். இத்தகைய சிறப்பு, இந்தத் துறையில் முன்னோடியாக விளங்கிய தாமோதரம் பிள்ளையவர்களின் பதிப்புகளில் முன்னமேயே இடம் பெற்றிருந்தது. நூல்கட்கு முன்னால் பிள்ளையவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி உரைகள், படிப்போர்க்கு நூல்களை நன்கு அறிமுகம் செய்து அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டின. மற்றும் இந்த ஆராய்ச்சிக் குறிப்புகள், தமிழ்மொழி இலக்கிய - இலக்கண ஆராய்ச்சியாளருக்கும் பெருந்துணை புரிவன வாகும். இவர்தம் ஆராய்ச்சி உரைகள் மிகவும் வன்மையும் நுண்மையும் வாய்ந்தவை; படிப்போரை இனிய நகைச் சுவை நடையாலும் இன்புறுத்துபவை.

தாமோதரனார் நூல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பிக்கும் பணியில் அரும்பாடு பட்டுள்ளார். ஒரே நூலின் பல ஓலைச் சுவடிப் படிகளை ஒத்திட்டு நோக்கிப் படித்துப் பார்ப்பார்: பெரும்பான்மையான சுவடிகளில் ஒரே மாதிரியாயிருக்கும் பாடத்தையே உண்மையான பாடமாக எடுத்துக்கொள்வார். சிறுபான்மையான சுவடிகளில் உள்ள வேறுபாட்டைப் பாட வேறுபாடுஅதாவது, பாடபேதம்-பிரதிபேதம் என்னும் பெயரில் அடியில் குறிப்பிடுவார். இவரது பதிப்பின் அடிக்குறிப்புகள் (Foot Notes) ஆராய்ச்சியாளர்க்குப் பேருதவி புரிவனவாகும். உரையிடையே காணப்படும் மேற்கோள் செய்யுள் ‘இன்ன நூலில் உள்ள இத்தனையாவது செய்யுளாகும்’