பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இவ்வாறாகப் பதிப்பாசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களாலேயே பாராட்டப் பெற்ற தாமோதரரின் பதிப்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக, அவர் தொடக்கத்தில் பதிப்பித்த வீரசோழியத்தை எடுத்துக் கொள்வோம். இது, 1881 ஆம் ஆண்டு-தமிழ் விசு ஆண்டு சித்திரைத் திங்களில் பதிப்பிக்கப் பெற்றது. நூலின் முகப்பில் ‘டிம்மி’ தாள் அளவில் முப்பது பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிப் பதிப்புரை எழுதியிருக்கிறார் தாமோதரர். இந்த ஆராய்ச்சியைக் கொண்டு தாமோதரர் எத்தகையவர் என நாம் படம் பிடித்துக் கொள்ளலாம். அவர்தம் ஆராய்ச்சியான புரட்சிக் கருத்துகளைக் கொண்டு அவரை அடையாளம் கண்டுகொள்ளலாம். பதிப்புரையின் தொடக்கத்தில் கடவுள் வணக்கம், கலைமகள் வணக்கம், தமிழாசிரியர் வணக்கம், அவையடக்கம் ஆகிய நான்கும் முறையே இடம் பெற்றுள்ளன.

பதிப்புரையைத் தொடர்ந்து, அதிகார அகராதி, படல அகராதி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி ஆகியன அமைத்துள்ளார். நூலின் இடையிடையே, பக்கங்களின் அடியில் தமது சொந்தக் குறிப்பு எழுதியுள்ளார். அந்த அடிக்குறிப்பில் பயனுள்ள பல்வேறு வகை விளக்கங்கள் உள்ளன. பதிப்பின் இறுதியில் பிழை திருத்தமும் அச்சிட்டுள்ளார். இந்த அச்சுப் பதிப்பிற்காக அவர் பட்ட பாட்டினைப் பற்றி அவரே எழுதியுள்ள வரிகள் வருமாறு;

'...எனக் கிடந்த ஏட்டுப் பிரதிகளோடு பட்ட பிரயாசைக்குப் பிரயாசை என்னும் சொல் போதுமா? முதலினின்று முடிவு வரைக்கும் ஒரொரு வரி ஒரொரு நொடியாகவே கொண்டுழைத்தோம் ... பிரதிகளின் ஏடுகளை ஒன்றை விட்டு ஒன்று பிரித்து எடுத்ததே பேரற்புத மாயிற்று ...'