பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

இவ்வாறு இவரே எழுதியிருப்பதைக் கொண்டு இவரது அச்சு முயற்சியின் அருமைப் பாட்டினை அறியலாம். இவர் எழுதியுள்ள பல பகுதிகளைக் கொண்டு, இவர் பல கோணங்களில் தமிழுக்குப் பணிகள் பல புரிந்துள்ளமை புலனாகும். பெரிய வள்ளலாகவும் திகழ்ந்த இவருக்குத் தமிழ்மீது முறுகிய பற்று இருந்தது. ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் இருபதாம் நூற்றாண்டில் பாடினார். ஆனால், தாமோதரனாரோ, இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே செயலில் செய்து காட்டினார். எவரேனும் தமிழ் மொழியைத் தாழ்த்திப் பேசுவரேல், தாமோதரர் சிறிதும் பொறார். அவர்களை வன்மையாகக் கண்டித்து இடித்துரைப்பார்.

இதோ இன்னொரு தமிழ்த் தொண்டு: கல்லூரியில் அன்று தமிழ் எடுத்துப் படித்தோருக்கு-ஏன்- இவ்வாறு கூறும் போதே வியப்பாயிருக்கிறதா? ஆம்! இன்றும் தமிழர் சிலர், முதல் மொழியாக ஆங்கிலத்தையும் இரண்டாவது மொழியாகத் தமிழ் அல்லாத வேறு ஏதேனும் ஒரு மொழியையும் கற்று, தமிழ் அறியாமலேயே தப்பித்துக் கொண்டு போவதைக் காணும் போது, அன்று, பலர், கல்லூரியில் தமிழ் எடுத்துப் படிக்காததில் வியப்பு இல்லை.

இந்த நிலையில், அன்று, கல்லூரியில் தமிழ் எடுத்துப் படித்தோருக்கு, தாமோதரனார் பேச்சுப் போட்டியும் பாட்டுப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் வைத்துப் பரிசளித்து வந்தார். அவ்வாறு இவரிடம் பரிசு பெற்றவர்களுள் பரிதி மாற் கலைஞராம் சூரியநாராயண சாத்திரியாரும் ஒருவராவார்.