உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

ஐயையோ! இங்கே இன்றியமையாத இன்னொரு பகுதியை மறந்துவிட்டோமே! அதுதான் தாமோதரம் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பகுதி. இதோ அது:-

அப்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்திருந்த இலங்கையில், சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவ நாதப்பிள்ளை என்பார்க்கு, கி.பி. 1832 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் இவர் பிறந்தார். பட்டுக்கோட்டையில் ‘செமினரி’ என்னும் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற தாமோதரர், சித்திரக் கவியில் வல்ல சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தனியே இலக்கிய இலக்கணங்களை முறையாகத் திறம் பெறக் கற்றுத் தேர்ந்தார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகம் 1857 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்திய B.A. தேர்வில் முதல் முதலாக இவர் தேர்ச்சி பெற்றார். B.A. பட்டத்தைத் தொடர்ந்து B.L. பட்டமும் பெற்றார்.

இவர் தம் வாழ்க்கையில் பல்வேறு தொழில்கள் புரிந்துள்ளார். நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பாடலாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கிய தாமோதரனார் கல்வி பயிற்றும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். முதலில் இவர் 1852 ஆம் ஆண்டு கோப்பாய் என்னும் ஊரில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர்களைப் பயிற்றும் ஆசிரியர்க்கு ஆசிரியராய்ப் பணியாற்றினார். 1857 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் கல்லூரியின் முதல்வர் பதவி ஏற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் குழுவிலும் (Board of Examiners) இடம்பெற்றிருந்தார். மற்றும் இவர் பத்திரிகை ஆசிரியர் பதவியையும் விட்டுவைக்க வில்லை. ‘தினவர்த்த மானி’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியராகவும் வேலை செய்தார்.