பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

தன்வரலாற்றுப் பகுதி

8. கம்பன் அறிமுக வரலாறு

இலக்கியம் படிப்பதன் நோக்கங்களுள் சுவையுணர்வும் ஒன்று என்பது மட்டுமன்று; அது தலையாய நோக்காகும். இலக்கியத்தைச் சுவைத்து இன்புற வேண்டும். இலக்கிய இன்பம் யாதினும் இனிது, இது குறித்தே,

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”

என்றார் திருவள்ளுவனார். நவிலுந் தோறும் நூல் (இலக்கியம்) நயம் பயக்குமாம்.

“தேருந்தொறும் இனிதாம் தமிழ்போன்று இவள்
செங்கனி வாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் என தாரு
யிர்க்கே’’

என்று தஞ்சை வாணன் கோவையில் பொய்யாமொழிப் புலவர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

பாவேந்தர் பாரதிதாசனோ,

“மங்கை யொருத்தி தரும் சுகமும்
எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை”

என்று பகர்ந்துள்ளார். தமிழ் இன்பம் என்பதன் பொதுவான கருத்து இலக்கிய இன்பமாகும்.

இவ்வாறு இன்பம் பயக்கும் தமிழ் இலக்கியங்களுள் தலையாயதொன்றுகம்பராமாயணமாகும்.நூலுள்நுழைந்து பார்த்தாலேயே உண்மை விளங்கும். இது கம்பனுக்குப் பெரும் புகழ் நல்கும் படைப்பாகும்.