பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

நடத்தப் பெற்றது. அப்போது வயது பதினேழு முன்னிலும் இலக்கியத்தைச் சுவைக்கும் பயிற்சி வளர்ந்திருந்தது. பேராசிரியர் புருடோத்தம நாயுடு அவர்கள் இராமயணப் படிப்பில் உருக்கம் ஊட்டினார்கள். நகர் நீங்கு படலம் நடத்திய போது,இராமன் காட்டிற்குப்போகின்றானே என்ற துயரத்தால்,பேராசிரியர் அவர்கள் நடு நடுவே சிறிது தேம்பி அழுததாக எனக்கு நினைவிருக்கின்றது. இந்தக் காலத்து மாணவர்கள் பலரைப் போல அந்தக் காலத்தில் நாங்கள் இல்லை. அடியேன் உட்பட மாணாக்கர் பலர் கண்களிலும் நீர் துளித்த நினைவு எனக்கு இருக்கிறது. இவ்வாறு புருடோத்தம நாயுடு அவர்கள், உருக்கத்துடன்-பக்திச் சுவையுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்கும் பான்மையில் கம்பனை அறிமுகப் படுத்தினார்கள்.

அவர்கள் பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் அமர்ந்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியான ஈட்டிற்கு விளக்கம் எழுதிப் பெரும்புகழ் பெற்றதைத் தமிழுலகம் நன்கு அறியும். இத்தகைய பெரியோராலும் கம்பனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது எனது நற்பேறே.

3) 1940 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அடியேன் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனாய் அமர்ந்தேன். பல ஆண்டுகள் மயிலம் கல்லூரியில் பணிபுரிந்தேன். அப்போது புலவர் வகுப்புக்குக் கம்பராமாயணப் பாடம் நடத்தும் பொறுப்பு என்னிடமே விடப்பட்டது. புலவர் வகுப்பிற்குப் பாடம் நடத்த வேண்டும் என்பதனால், கம்பராமாயணத்தை ஒரளவு துருவியும் ஆழமாகவும் படிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இவ்வாறு இயற்கையாகவும் கம்பனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது.