பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

4) 1942 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் என் தாயாரும், மார்ச்சுத் திங்களில் என் தந்தையாரும் இறந்து போயினர். இரண்டு திங்கள் இடைவெளியில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட நான் மிகவும் சோர்ந்து போனேன். எங்கட்கு மூன்று திங்கள் காலம் கோடை விடுமுறை விடப்பட்டது விடுமுறை தொடங்கிய சிலநாளில், ஆறுதலுக்காக ஊரிலிருந்து மயிலம் சென்றேன். அப்போது அங்கே முதுபெரும் புலவர் தோரமங்கலம் அ. வரதநஞ்சையப்பிள்ளை வந்திருந்தார்கள். சொற்பொழிவிற்காக அவர்கள் இதற்கு முன்பும் சிலமுறை வந்திருக்கின்றார்கள். அதனால் அவரது தொடர்பு முன்னமேயே எனக்கு உண்டு.

பெரியார் வரதநஞ்சையப் பிள்ளையவர்களைப் பற்றிச் சில சொற்கள் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலமையுடையவர்கள். அவர்தம் தமிழ் வாழ்த்துப் பாடல்கள் மிகச் சிறந்தவை. அவர்கள் இயற்றிய ‘தமிழரசுக் குறவஞ்சி’ என்னும் இனிய நூல், கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் அரங்கேற்றப் பெற்று அவர்கட்குப் பெரும்புகழும் பேரும் பெற்றுத் தந்தது. அவர்கள் எப்போதும் நகைச்சுவையோடு பேசும் இயல்பினர். ஒருநாள் ஒருவர் சாவியைத் தொலைத்து விட்டு, ‘என்சாவி எங்கே எங்கே’ என்று வினவிக் கொண்டிருந்தார். புலவர் அவர்கள் அவரை நோக்கி, ‘சாவி சாவி என்று உசாவிக் கொண்டு இருக்கிறீர்களே’ என்று கூறி அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தினார்கள். ஒருநாள் ஒருவர் மோட்டார் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். புலவர் அவர்கள் அவரை நோக்கி “கார் வரவில்லையா? நீ சிறிது நேரம் கார் (காத்திரு); சரி இப்படி உட்கார் ; நீ விரும்புகார் வராததனால் ஒரே புகார் ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வேடிக்கையாகப் பேசினார்கள். இன்னும் இவ்வாறு பற்பல கூறலாம்.