பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

அடுத்து, இலக்கியம்-வரலாறு என்னும் இரண்டனுள் எது பெரியது என்றும் ஆராய வேண்டும். அதாவது, இலக்கியத்தில் வரலாறு அடங்குமா-அல்லது வரலாற்றில் இலக்கியம் அடங்குமா? என்று காணவேண்டும்.

பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர், எண்ணி வந்தனர் என்பதாக ஒரு கருத்து முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தக் கருத்து வெளியீடு முற்றிலும் சரியான தாகாது, ஒருசில வரலாற்று நிகழ்ச்சிகள் ஒருசில இலக்கியங்களில் சுட்டப்பட்டிருக்கலாம்-அல்லது-விரிவாகவும் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் வரலாறு என்பது, இலக்கியம் என்பதனினும் மிகவும் பெரிய தாகும்-பரந்துபட்ட தாகும்.

உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை-இந் நேரம்வரை நடைபெற்றுள்ள பல்வகை நிகழ்ச்சிகள், தோன்றியுள்ள பல்வேறு உயிர்ப் பொருள்கள், உயிரில்லாப் பொருள்கள், இடங்கள், செயற்கைப் படைப்புகள், கண்டு பிடிப்புகள், அரசியல், சமூகம், தொழில், வாணிகம், வாழ்க்கை முறை-முதலியன பற்றிக் கூறப்படும் அனைத்தும் வரலாறு எனப்படும். இத்தகைய பல்வேறு வரலாறுகளுள் இலக்கியம் பற்றிய வரலாறும் ஒன்றாகும்; இஃது ‘இலக்கிய வரலாறு’ எனப்படும். இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், இலக்கியத்தினும் வரலாறு பரந்துபட்டது என்னும் உண்மை போதரும். அங்ஙன மெனில், இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள், என்னும் தலைப்பினால் அறியக் கிடக்கும் இலக்கியம் என்பதற்கும் வரலாறு என்பதற்கும் இடையேயுள்ள தொடர்புதான் யாதோ?

வரலாறு எழுதும் ஆசிரியனுக்கு, எழுதும் செய்திகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்க வேண்டுமே! தக்க ஆதாரம் இன்றிக் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது