உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

திருக்குறள் கருத்துகட்கு அப்படியே ஒத்த உருவம் தந்துள்ளார். இதோ அது:

'பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதே விரதமாகக் கொண்ட சீவகாருண்யம் உள்ளவருக்குக் கோடையில் வெயில் வருத்தாது; மண்ணும் சூடு செய்யாது; அவர்கள் கள்ளர்களாலும் பகைவர்களாலும் கலக்கப்படார்கள்; அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள். சீவ காருண்யம் உள்ளவரது விளை நிலத்தில் முயற்சி இல்லாமலேயே விளைவு மேன்மேலும் உண்டாகும். எப்படிப்பட்ட துன்பமும் சத்தியமாக வராது. உயிர்களைப் பசி என்ற பிணியினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், தேவர் -முனிவர் முதலிய யாவராலும் வணங்கத் தக்க சிறப்புடையர்'-இது வள்ளலார் அருளிய உரைநடைப் பகுதி.

வள்ளலார் பிறர் பசி நீக்குவதைப் பற்றி எழுதியதோடு-பேசியதோடு நின்றுவிடவில்லை; செய்கையிலும் பின்பற்றி அறச்சாலை அமைத்து 'வள்ளலார்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.

சமூகம் என்பது=ஆறறிவு படைத்த மக்கட் கூட்டம் என்பது இக்காலத்து அறிஞர்களின் பொருள். ஆனால், ‘ஓரறிவு பெற்ற மரம் செடி கொடி முதல், ஆறறிவு பெற்ற மக்களினம் வரையுமுள்ள உயிர்களின் கூட்டம் முழுவதும் சமூகம்’ என்பது வள்ளலாரும் வள்ளுவனாரும் கண்ட பொருள் ஆகும். அதாவது, 'ஆன்ம நேய ஒருமைப்பாடு’ ஆகும். அது, இனி, சமூகம் என்பது நில உலகோடு நிலா உலகம், செவ்வாய் உலகம் போன்றனவும் சேர்ந்தது என்று சொல்லக் கூடிய காலம் வருமோ என்னவோ!

அடுத்து,-உயிர்க் கொலையையும் புலால் உண்ணலையும் வள்ளுவரைப் போலவே வள்ளலாரும் வன்மையாகக்