பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாத கருப்பையூர்

25

கரு வளர வளரக் கருப்பை விரிந்து வெளுத்துச் சாதாரணமாக முன்னால் இருந்ததைவிடச் சுமார் 300 மடங்கு கனமடைகிறது. மஞ்சலரியின் ஆதிக்கம் இருக்கும் வரையில் இது சுருங்க முடியாது.

மஞ்சலரியின் ஆதிக்கம் எப்பொழுதுமே நீடிப்பதில்லை. கருவுண்டாகி 9 மாதங்களுக்குத்தான் அதற்கு அதிகாரம். பிறகு அது பலமிழந்து நலிந்து விடுகிறது. அதற்குமேல் அதன் ஆதிக்கமும் தேவையில்லை. அவ்வாறு மஞ்சலரியின் சக்தி ஒடுங்கியதும் கருப்பை தனது இயல்பின்படி சுருங்கி நெளியத் தொடங்கும். அதனால் 9 மாதமாக வளர்ந்த குழந்தையை வெளியே தள்ளுவது சாத்தியமாகிறது.

குழந்தையை வெளியிலே தள்ளுவதற்கு அடி வயிற்றுத் தசை நார்களும், மற்ற பாகங்களும் உதவி செய்கின்றன. ஒன்பது மாதம் சிரமப்பட்டுக் குழந்தையை வளர்த்த கருப்பை அதை வெளியே அனுப்பிவிட்டு மெதுவாகப் பழைய அளவிற்குச் சுருங்கி ஒய்வு கொள்கிறது.