பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயப் பிறவி

27

இப் பணியைச் செய்வதற்குக் கருப்பை முன்னமேயே வேண்டிய ஆயத்தங்களுடன்தான் இருக்கிறது. அதன் சுவரில் புதிய இளமையான இழையங்கள் அமைந்திருக்கின்றன ; அங்கு ரத்தம் நிறைந்திருக்கும். அண்டம் பூரித்துக் கருவானால் இவை பயன்படும் ; இல்லாவிட்டால் அந்த இழையமும், ரத்தமும் பயனற்றுச் சூதகமாக வெளி வந்து விடுகின்றன.

பூரித்த அண்டம் பல நூற்றுக்கணக்கான அணுக்களாகப் பிரிந்து திரண்டு ஒரு பிழம்பாகிறதென்று சொன்னேனல்லவா ? அதைச் சுற்றிலும் மெதுவாகக் கண்ணாடி போன்ற பையொன்று உண்டாகிறது. அதற்குப் பனிக்குடம் (Amnion) என்று பெயர். அதற்குள்ளேதான் நீரிலே மிதந்துகொண்டு கரு வளர்கின்றது. பனிக்குடத்தைச் சுற்றிலும் ஒரு சவ்வு (Membrane) உண்டு. அது கருவைத் தாயுடன் பிணைத்துக் கருப்பையிலுள்ள ரத்தக் குழாய்களுடன் தொடர் புண்டாக்குகிறது.

அதோடு இந்தச் சவ்வே தடித்துக் கருக்குடை (Placenta) யாக மாறிவிடும்.

கருக்குடையின் வடிவத்தைப் படத்தில் காணலாம். அது கருவை ஊட்டி வளர்க்கும் உறுப்பாக அமைகிறது. கருக்குடைக்கும் கருவிற்கும் தொடர் பேற்படுத்துவது நஞ்சுக்கொடி. இக்கொடி மூல மாகத்தான் ரத்தக் குழாய்கள் கருவிற்கும் கருக்குடைக்கும் போகவும் வரவும் முடிகிறது.