96
“இப்படி வா” என்று அவனை அழைத்தார். “இது ரகசியச் சுரங்கத்துக்குப் போகிற பாதை!” என்றார். சொல்லி விட்டு, அந்தப் பொத்தான் அமைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி புதிதாகப் பின்னிக் கிடந்த சிலந்தி வலையைப் பிய்த்து விட்டு, ‘கடகட’ வென்று எக்காளமாய்ச் சிரிப்பைக் கக்கலானர். “இப்படி வா, வந்து சுரங்கத்தைப் பார்!” என்றார்.
அவனுக்கு விருப்பமில்லை என்றான். ஆனாலும், “வேறு விசேஷம் எதுவும் இல்லையா அங்கே?” என்ற பாவனையில் தன் தகப்பனாரை ஐயக்குறிப்பு மிளிரப் பார்த்தான்.
அவரும் அதை அனுமானம் செய்துகொண்டவர் போல, “அந்தச் சுரங்க அறையில் அரசாங்கத்துக்கு விரோதமான காரியம் எதுவும் நடக்கவில்லை : நடக்கவும் நடக்காது. முன்பு நாம் மயிலாப்பூரில் இருக்கையில் ஒரு சமயம் நகைகள் திருடு போய்விட்டன அல்லவா ? அப்படிப்பட்ட கஷ்டங்கள் மீண்டும் தொடராதிருக்க, நானே திட்டமிட்டு யோசித்து, இப்புதிய அமைப்பை உண்டாக்கினேன். பொன்னும் பொருளும் வைப்பதற்கு இதைவிட உகந்த இடம் வேறில்லை. இதை இயக்கும் முறை எனக்கு மட்டுமே தெரியும். உன்னிடம் விரைவிலேயே இது பற்றித் தெரிவிக்க வேணும் என்றிருந்தேன். அதற்குகந்த சந்தர்ப்பமும் இயல்பாகவே உருவாகி விட்டது! வா, ஞானபண்டிதா! வந்து பார்த்துவிட்டுப் போ. சுரங்க வழியை இயக்கும் வழியையும் சொல்லிக் காட்டி விடுகிறேன். நாளை என்று தள்ளிப் போடுவது தவறு தம்பி!” என்றார் .
அவன் பிறகு ஆகட்டுமென்று தடுத்துவிட்டான்.
அவர் சுரங்க அறைப் பொத்தான் இருந்த இடத்தை அடைத்திருந்த நீலத் திரையை இழுத்துவிட்டார். கையில் நிமிண்டியவாறு இருந்த ‘டேப் ரெகார்டர்’ நாடாக்களை மெத்தையின் தலையணைக்கு அடியில் போட்டுவிட்டு, “சாப்பிட்டாயா தம்பி?” என்று கேட்டபடி, ‘சிகார் பைப்’பை எடுத்துப் பற்ற வைத்தார்.
சாப்பிட்டதாகச் சொன்னான் அவன். பிறகு அவரிடம் தன் திட்டங்களை விவரித்தான். இனம் விளங்காத ஒருவகைப்பட்ட அமைதியிழந்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டான் காரில்.