பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

பணத்துக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனிடம் விற்கக் கனவு காணுகிறான்!” என்றாள் அவள், வெகு தெளிவான பாஷையில். கண்ணீர் மாலை, மாலையாக வழிந்தோடியது! அவள் குரலில் அடிநாதம் பரப்பிய சோகத்தை அவள் எப்படிக் கட்டுப்படுத்துவாள். பாவம் !

“செங்கோடன் யார்? எந்த ஊர்?”

“அவரு சிலோன் பக்கம் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு பணக்காரன் ஏதோ ஒரு கொலை செஞ்சிட்டார் போலிருக்கு. அப்போ இவர், கிட்டே இருந்திருக்கவேணும். இதையே ஒருசாக்காகக் கொண்டு, அந்தப் பணக்காரனைப் பயமுறுத்தி, அடிக்கடி பணம் கரந்துக்கிட்டு வருரார்னும் தோணுது. இவரு யாரோ ஒரு பெண்ணே வச்சுக்கிட்டு இருக்கார். அந்தப் பக்கம்தான் அவள் வீடு. அங்கே இருந்துதான் இப்ப சாப்பாடு எடுத்துக்கிட்டுப் போறேன்!” இப்போது அவள் பேச்சு தடுமாற்றத்துடன் வெளி வந்தது. அவள் மார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்தது. நேர் கொண்ட பார்வையால் நிமிர்ந்து அவனை அவள் எடை போட்டாளோ ?

“பூவழகி!”

“சொல்லுங்க!”

“நீங்க மறுபடியும் சிங்கத்தின் குகைக்குப் போகத்தான் வேணுமா ?”

“ஆமாங்க. போகாமல் இருந்தால், அது தர்மம்னு எனக்குத் தோணலிங்களே !”

“மெய்தான் ! ஆனால், இன்று இராத்திரி உங்களை எதிர் நோக்கி இருக்கக்கூடிய பயங்கரத்தையும் நினைச்சுப் பார்க்க வேணுமில்லே ?”

“உண்மைதானுங்க. என்னோட தன்னம்பிக்கையும், எனக்குள்ள அந்தரங்க சுத்தியும், நான் கொண்டிருக்கிற கடவுள் பக்தியும் என்னை எப்பவும் கட்டிக் காப்பாத்துமுங்க ஐயா ! அந்த ஆள் நல்லபடியாய் எனக்கு விடுதலை தராட்டி, அப்ப நடக்கிறது வேறேதான்! வந்துதான் பாருங்களேன் !” என்று சூள் உரைத்தாள் அவள்.