3
‘பெண்கள் அறமடா!’
சுவர்க்கடிகாரத்தின் நிமிஷ முள்ளும் வினாடி முள்ளும் கண்ணுக்குத் தோன்றா வகையில் தம் கடமையைச் செய்து கொண்டிருந்தன – கடவுள் கண்ணுக்குத் தோன்றுவதில்லையல்லவா, அப்படி !
மதிய உணவு கொண்டதும், உண்ட களைப்புத் தீர, பெரியவர் சோமசேகர் கட்டிலைத் தஞ்சம் அடையவில்லை. நேராக ஞானபண்டிதனிடம் வந்தார். இரவு தமக்கு வேண்டிய ஒரு குடும்பத்தாரைப் பார்த்துவரத் தம்முடன் வரும்படி ஞானபண்டிதனிடம் சொன்னார்.
அவரது பேச்சைக் கேட்டதும் அவனுக்கும் பகீரென்றது. இரவு மணி எட்டு – எட்டரைக்குத் தனக்குள்ள மனிதாபிமானக் கடமை அவன் முன்னே நின்று எச்சரித்தது. விஷயத்தைப் பிட்டு வைத்துத் தந்தையிடம் சொன்னால், அவ்வளவுதான்; அவர் பயந்துவிடுவார் ! – ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்க வேண்டுமென்பார் ! இல்லையா ?...
“என்ன தம்பி யோசிக்கிறே?” என்றார் அவர்.
அவன் மெல்லத் தயங்கினான். ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடன் படித்தவர் ஒருவர் நாடகத் தயாரிப்பில் இருப்பதாகவும், அவரை இரவு சந்திப்பதாக ஏற்கெனவே அறிவித்திருப்பதாகவும் சொன்னான். ‘பொய்’ சொன்னான். வேறு வழி இல்லை.
அவர் மறு பேச்சாடாமல் ‘ஒ. கே.’ சொன்னார். “அப்படியென்றால் நாளைக்குச் செல்வோம். நாளைக் காலையிலேயே புறப்பட்டு உடனடியாகவே திரும்பிவிடலாம்,” என்றார்.
அவன் ‘சரி’ சொன்னான்.
காலம் கவரிமான் ஆனது.
மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது – இரவில்.