பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

செங்கோடன் பயங்கரமாகச் சிரிப்பை உமிழ்ந்தான். “என்கிட்டவே நீ பயங்காட்டுறீயே ?” என்றான்.

“நீதியும் நேர்மையும் தடம் விலகும் போது, பெண்ணும் பேயாக ஆகிப்பிட வேண்டியது தானே ஐயா !” என்று அமெரிக்கையாகப் பதிலிறுத்தாள் அவள்.

“மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது ஊம் !” என்று கறுவிக்கொண்டு, சவுக்குடன் அவளை நெருங்கினான் செங்கோடன்.

அந்தப் பணக்கார மனிதர், பாவம், பயந்துபோய் ஒதுங்கி விட்டார்.

அவள் — பூவழகி — வெகு ஒயிலுடன் கைகளைக் கட்டிக் கொண்டு, எதையும் சமாளிக்க முடியுமென்ற அழுத்தத்துடன் நின்றாள்.

செங்கோடன் சவுக்கை வீசியதுதான் தாமதம்; மறுவினாடி அச்சவுக்கு பூவழகியின் பூங்கரங்களிலே சரண் புகுந்தது.

கை தட்டிக்கொண்டே ‘ஸ்டைலாக’ உள்ளே அடியெடுத்து வைத்துக்கதவைத் தட்டினான் ஞானபண்டிதன்.

பூவழகி வந்து கதவைத் திறந்தாள்.

ஞானபண்டிதனைப் பார்த்த செங்கோடனின் கண்கள் கோவைப்பழம் ஆயின. “ஓஹோ, நீயா ? ஏன் இங்கே வந்தே ?” என்று பெருங்குரலில் கேட்டான் அவன்.

“அபலைப் பெண் பூவழகியைக் காப்பாத்துறதுக்கு வந்தேன் !” என்றான் அவன். “ஒஹோ, நீயா ?” என்ற கேள்வியின் கிண்டல் பேச்சு, தன்னை ஏற்கனவே அந்த முரடன் அறிந்திருப்பதைச் சுட்டிய சூட்சுமத்தையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. மத்தியானம் பூவழகியைச் சந்தித்த பின், பங்களாவிற்குள் நுழைந்த தருணத்தில், இதே முரடன் தன் பங்களாவை விட்டு வெளியேறியதையும் அவனால் மறக்க முடியாது. பெரியவரிடம் இந்தப் போக்கிரியைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றுதான் இருந்தான். அதற்கு வாய்ப்பாகச் சந்தர்ப்பம் கூடினால்தானே ?

“பூவழகியைப் பாதுகாக்க நீ வந்திருக்கியா? பணக்காரப் பிள்ளையை மரியாதை இல்லாது ‘நீ’ என்று கூப்பிடுறது உனக்குச் கோபமாயிருக்கும், இல்லையா? நீ அப்பாவி