பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அதனாலேதானே உன்னையே நீ பாதுகாத்துக்கிடத் துப்பு இல்லாம, பிறத்தியாருக்காகப் பரிஞ்சுக்கிட்டு ஓடி வந்திருக்கியோ ?” என்று எகத்தளமான நையாண்டி நகைப்பினை மீண்டும் உதிர்த்தான் செங்கோடன்.

ஞானபண்டிதனுக்கு அவன் பேச்சு, தன் நெற்றிப் பொட்டில் விழுந்த அடியாக வலித்தது. “ஐயா, பண்பில்லாத உம்மிடம் வாதாட நான் வரவில்லை. நீர் பூவழகியைப் பணத்துக்கு விற்பதென்பது, என் உயிர் என் உடம்பில் உள்ள மட்டும் நடக்காது; நடக்கவும் முடியாது. இன்னொரு விஷயத்தையும் நீர் நெஞ்சில் எழுதி வைத்துக்கொள்ளும். என் அப்பா எனக்குக் கடவுள் மாதிரி. அவர் உயிருடன் உள்ளவரைக்கும் என்னை நான் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. என்னை அவர் காப்பாத்துவார்; பாதுகாப்பார் !” என்று பெருமிதம் துள்ளியோடச் சொன்னான் அவன்.

“உன் அப்பாவா ? யார் உன் அப்பா ? பூரீமான் சோமசேகர் உன் அப்பாவா ?” என்று வீறுடன் முழங்கியபடி மறுபடி சிரித்தான் செங்கோடன். சொல்லிவிட்டு, எதிர்ப்புறம் பார்வையை ஓட்டினான். அவனுக்குப் பகீரென்றது.

பூவழகியைக் காணவில்லை !

அந்தப் பணக்கார மனிதரையும் காணோம் !

“பூவழகி !...பூவழகி !” என்று ஓலமிட்டவண்ணம் அங்கிருந்து வெளியேறி, இருட்டில் புகுந்தான் செங்கோடன்.

புதராக வளைந்து நின்ற பூவழகியின் இனிய நினைவை நெஞ்சிலும், அந்த முரடன் செங்கோடன் கிளப்பிவிட்ட புயலை நினைவிலும் சுமந்தவனாக அங்கிருந்து கிளம்பினான் ஞானபண்டிதன் !