பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


சிலந்தி வலையா ?

ரவு வாழ்ந்தது ; வளர்ந்தது : சோமசேகர் சாப்பிடுவதற்கு ஞானபண்டிதனை எதிர்பார்க்கவில்லை. ரேடியோ ஸ்டேஷன் நண்பருடன் சாப்பிட்டிருப்பான் என்றே அவர் கருதினார். ஆகவே, அவர் தனியாகச் சாப்பிட வேண்டியவரானார்.

“தம்பி இருந்தால் நீங்க ஒரு பிடி கூடுதலாகத்தான் சாப்பிடுறீங்க !” என்று ‘நைஸாக’ ஒர் உண்மையினைச் சொல்லி வைத்தான் வேலப்பன், மிச்சம் இருந்துவிட்ட சாதத்தைக் கணித்தபடி.

பெரியவரும் லேசாகச் சிரிப்புக் காட்டினார். வேலப்பன் சொல்லும் பேச்சுக்கு அவர் எப்போதும் அக்கறை காட்டுவது வழக்கம். ‘இத்தினி காலமாய் என்னோடே எவ்வளவோ ஒத்துழைச்சவன் இந்த வேலப்பன். என்னோட வாழ்நாளிலே தொழில் நிமித்தமாய் இதுவரை எத்தனை இடங்களை மாற்றிப்பிட்டேன் !... அப்பப்பா ! நடந்த கூத்துக்களை இப்போ நினைச்சாலும் மயிர்க்கூச்சம் எடுக்குது !... இனிமே நிம்மதிதான்! எனக்கென்ன ? ஞானபண்டிதன் தலையிலேதான் இனி எல்லாப் பொறுப்பும் விழப் போகுது! இனிமே முருகப்பெருமானோட ஆறுபடை வீடுங்கதான் சதா எனக்குச் சதம் !...’

எதையோ நினைத்தவர், எதையெல்லாமோ நினைக்க வேண்டியவரானார்.

அப்போது, வேலப்பன் கீழே சமையற்கட்டுக்குப் போனவன் மீண்டும் மாடிப்படிகளைத் தாண்டி வந்து, "ஐயாவுக்குங்க !... மோளைத் தலை ஆசாமி இல்லீங்க, அந்த ஆம்பளை உங்களோட பேசுறதுக்கு டெலிபோனிலே அழைச்சாருங்க கொஞ்ச முந்தி. நீங்க பூஜையிலே இருக்கிறதாய்ச் சொல்லி வச்சிட்டேனுங்க " என்று ஒப்புவித்துவிட்டுத் திரும்பிவிட்டான்.