பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

ஞானபண்டிதனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு புகைச்சல மூட்டம் போடத் தொடங்கிவிட்டது. ஒரு முறை சுரங்கப் பாதை வழி சென்று மீண்ட தன் தந்தையின் போக்கை எண்ணிய போழ்து, சுவரில் வலை பின்னிக் கிடந்த சிலந்தி வலையையும் அவன் நினைத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘உன் அப்பாவா ? யார் உன் அப்பா ? ஸ்ரீமான் சோமசேகர் உன் அப்பாவா ?’ என்று கேலியும் கிண்டலுமாக, ஏதோ ஒர் அப்பட்டமான— தர்மச்சார்பின் அடிப்படையில் பதுங்கிக்கிடந்த ஒர் உண்மைத் தொனியுடன் எதிர்க்கேள்வி கேட்ட அந்தப் பயங்கரத்தை — அந்தப் பரிதாபத்தை — அந்தத் துர்ப்பாக்கியத்தை — அவன் இனி எப்படி மறக்கப் போகிறான்? இப்போது மீண்டும் மீண்டும் அதே கேள்விச் சுழலில் அவன் மனம் சுற்றிச் சுழன்றது. அவன் மூளை வலித்தது. நெஞ்சு கனத்தது. வரும் வழியில், வேறு வழியின்றி, ஒரு ‘ப்ளேயர்ஸ்’ பிடித்தான். இப்போது அதற்கும் மார்க்கமில்லை. ‘என்வரை ஏதோ ஒரு மர்மம் சிலந்தி வலையாகப் பின்னிவிட்டிருக்கிறது : ஆம் ! ...இட் இஸ் தி ஃபாக்ட் அண்ட் இட் இஸ் தி காஸ்...!’ மீண்டும் சிந்தனைகளைக் கட்டறுத்து விட்டுவிட்டான்.

இருவரும் எவ்வளவு நாழிகை மோனத்தில் முடங்கிக் கிடந்தார்களோ ?

அவன் எழுந்தான் , தன் அறைக்குச் சென்றான். அவன் படுக்கையில் சாய்ந்தான். உள்மனம் பொங்கி ஏங்கியது. பிறந்த நாள் தொட்டு, தாய் முகம் காணக் கொடுத்து வைக்காமல், பெற்றவளை இழந்துவிட்ட அந்தத் தன்னுடைய துர்அதிர்ஷ்டத்தைச் சபித்தபடி திண்டில் சாய்ந்தான்.

வினாடிகள் ஊர்ந்தன.

மணி பத்து !

பூவழகியைப் பற்றி நினைப்பு எடுத்த நேரத்தில், அவள்பால் தன்னையும் மீறிய வகையில் ஒரு பாசம் — ஓர் அன்பு — ஒரு பிரியம் — ஓர் ஈடுபாடு — கனிந்து வருவதை அவன் தீர்க்கமாக உணரலானான்.

அப்போது, தொலைபேசி மணி ஒலித்தது. அவன் எடுத்தான். போக்கிரி செங்கோடன் பேசினான். பெரியவர் மாதிரி ஞானபண்டிதன் குரலை மாற்றிப் பேசினான் : "ஆமா, நான்தான் சோமசேகர் பேசுறேன் !” என்றான்.