பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


தோட்ட வீட்டில் !

‘செந்தில் விலாசம்’ பங்களாவுக்கு உடைய அந்த அழகிய நீலவண்ணக் கார் தாம்பரத்தை இலக்கு வைத்துப் போய்க் கொண்டிருந்தது.

உதயப் பூ மடலவிழ்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தது.

பகல் செய்வோன் கதிர்களை வெம்மைப்படுத்தி ஏறு முகத்தில் வீசிக்கொண்டிருந்த வேளை அது.

சிந்தனை வசப்பட்டவனாகச் சாய்ந்திருந்தான் ஞான பண்டிதன். அவன் சிந்தனையிலும் சித்தத்திலும் அக்கணம் செங்கோடன்தான் விசுவரூபம் எடுத்து, இமயமலையாகக் குந்தியிருந்தான். ஞானபண்டிதனுக்கு வாய்த்திட்ட விதியாகவும், அவன் வாழ்வுக்கு அமைந்துவிட்ட வினையாகவும்கூட அந்த எத்தன் தோன்றினான். ஆம் , அவன் எத்தனாகவே ஞானபண்டிதனின் மனத்தில் தோன்றினான். அதற்காக, அவன் பேச்சைக் காற்றில் தட்டி வீசிவிட்டு அசட்டை செய்யவும் அப்பொழுது ஞானபண்டிதன் தயாராக இருக்கவில்லை. அதன் விளைவாகத்தான், முரடன் செங்கோடனுக்கு விதியின் மதிப்பும், வினையின் அந்தஸ்தும் தர ஞானபண்டிதன் துணிந்துவிட்டிருந்தானே ?

“தம்பி !” என்று குரல் கொடுத்தார் சோமசேகர். முன் ஆசனத்தில் இருந்தபடியே தலையைப் பின்வாட்டில் திருப்பினார்.

கனாக் கண்டு விழிப்பவனை ஒத்து கண்களை விழித்தான், அவன். “என்னங்க, அ...அப்...பா ?” என்று தயங்கியபடியே ‘அப்பா’ என்ற பதச்சேர்க்கையை வெளியிட்டான் அவன்.

“தம்பி, என்ன ஒரு மாதிரி இருக்கே?” என்று தாழ்குரலில் கேட்டார். டிபனுக்கு அவன் தன்னுடன் வராதது ஒருவேளை வேதனை தந்திருக்கக்கூடும்.