111
பெரியவருக்கு பட்சி சுடுவது ஒரு ‘ஹாபி’ !
துப்பாக்கிக்கு அது கடன் — அதாவது, கடமை !...
ஞானபண்டிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கதவின் பாதி இடைவெளியில் கண்களை மேயவிட்டான். தாம்பரம் பஸ் நிலையம் வந்தது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வலிவூட்டிப் பேசிய சில வாசகங்களைப் பாரதப் பிரதமரின் வாய்மொழியாகப் படத்துடன் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் தென்பட்டன. “பொது எதிரிகளை தோற்கடிக்க, வாரீர் !” என்பது போன்ற வீர வாசகங்களும் மின்னின.
கார் மடங்கியது.
பெரியவர் கொடுத்த அடையாளக் குறிப்பின் பிரகாரம் கார் மடங்கியது.
“தம்பி, இன்னும் கொஞ்ச நேரம்தான் !” என்றார்.
“அதுக்கென்ன !” என்ற பாவனையில் அவன் மென்முறுவல் இழைத்தான். “ஆமாம் ; உங்க நண்பர் நகரத்தின் எல்லையைத் தாண்டி இவ்வளவு தொலைவிலே வந்து குடியிருக்காங்களே ?” என்றான்.
நண்பரல்ல, தம்பி ! நண்பரின் மனைவியும் அவர்களோட பெண்ணும்தான் இங்கே குடியிருக்காங்க !...அடி நாளிலே அந்த நண்பர் மட்டும் இல்லேன்னா, நான் செத்த இடம் எப்பவோ புல் முளைச்சுப் போயிருக்கும் !...” நன்றியின் மனச்சாட்சி போல அவரது குரல் தழுதழுத்தது. “ஆனால்...அந்த நண்பர் இந்த இருபத்தஞ்சு வருஷ காலமா எங்கேயோ தலைமறைவாய் இருக்கார் !....அவர் இருக்கக்கூடிய இடம்தான் தெரியலை... கடைசி காலத்திலே ஐ.பி. கொடுத்திட்டார் ! என் கடமையை நான் செஞ்சுக்கிட்டிருக்கேன் !...' என்று முடித்தார் சோமசேகர்.
அவரது மெளனமான துயரத்தில் அவனும் பங்கு பெற மெளனம் சாதித்தான்.
கார் நின்றது.
“குழலி தங்கமான பெண் : தங்கமான குணம் !” என்று சம்பந்தமில்லாமல் சொன்னார், பெரியவர்.