பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

“உள்ளே இருக்குது. யாரோ அதோட சிநேகிதியாம். அதோடே பேசிக்கிட்டிருக்குது !”

“சரி, தம்பிக்கு காப்பி கொண்டுவரச் சொல்லுங்க !”

“நல்லதுங்க !”, என்று வந்த அம்மாள் உள்ளே சென்றாள்.

அடுத்த ஐந்தாவது நிமிஷம் அழகு ஒர் உருக்கொண்ட பாங்கிலே குழலி அன்னநடை பயின்று, குனிந்த தலையை மெல்ல உயர்த்திப் பார்வையில் நாணப்பூவைத் தூவிவிட்டு வந்தாள். கையில் காப்பிக் கோப்பைகள் இரண்டு இருந்தன.

“சும்மா வெட்கப்படாமல் கொடும்மா !”

அவள் — குழலி — காப்பிக் கோப்பை ஒன்றைப் பவ்யமாக ஞானபண்டிதனிடம் நீட்டினாள். முறுவல் சிந்தினாள். கன்னங்கள் குழிந்தன. வலது கன்னத்து மச்சம் அழகுக்கு அழகானது !

ஞானபண்டிதன் அதை மென்மையான புன்னகையுடன் ஏந்தினான்; குடித்தான்.

சோமசேகர் காப்பியை அருந்திவிட்டு, துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். “ஒரு ரவுண்ட் பார்த்திட்டு வர்ரேன். நீங்க பேசிக்கிட்டிருங்க !” என்று சொல்லிச் சென்றார்.

ஞானபண்டிதனுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது, “அப்பா உங்களைப்பத்தி சொன்னாங்க !” என்றான்.

அன்னபாக்கியத்தம்மாள் அப்பேச்சில் திகைப்படைந்தது போலத் தடுமாறினாள். “என்ன சொன்னாங்க ?” என்று கேட்டாள்.

“உங்க கணவர் எப்படியும் உங்களுக்குக் கிடைச்சிடும்னுதானுங்க தோணுது !...பாவம், இத்தனை காலமா அவரை விட்டுப் பிரிஞ்சு இருக்கிறதின்னா அது பெரிய தவம்தானுங்க அம்மா ! எப்படியும் அவரை உங்க கண்ணிலே தென்படவைச்சிடுவார் கடவுள் !”

“எல்லாம் தம்பியோட நல்லவாக்குப்படியே நடக்கட்டும் !” மெய்யுருகிப் பேசினாள் அம்மணி.

குழலியைக் காணோமே !

அருகில் விரிந்து கிடந்த புத்தகத்தைக் கைநீட்டி நகர்த்தினான்.

‘கச்சதேவயானி’ நாடகம் அது !

புரட்டினான்.

க. ம —8