பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117


தொடுவானம் பார்ப்பதற்கு எவ்வளவு அந்தமுடன் பொலிகிறது!

மெரினா கடற்கரை என்றால் அதன் அழகே அலாதிதான்!

மஞ்சள் வெய்யில் மறைந்துவிடும், இனி!

ஞானபண்டிதன் எழுந்தான். அப்போது தன் பெயரைச் சொல்லி நண்பன் காளமேகம் அழைத்ததை அறிந்தான். அவன் கையில் ஒரு சஞ்சிகை இருந்தது.

“கதை வந்திருக்கா பிரதர்?” என்று கேட்டான் அவன்.

காளமேகம், ‘ஆம்’ என்று உரைத்தான். இதழை நீட்டினான். ‘விளையாட்டுத் தோழி’ என்ற தலைப்பில் கதை எழுதப்பட்டிருந்தது.

வீட்டில் படித்துவிட்டு, திரும்ப அனுப்பி வைப்பதாகக் கூறி, அந்த ‘எழில்’' இதழை எடுத்துக்கொண்டான், மெரினா காண்டீனில் சாயா குடித்துவிட்டு நண்பனிடமிருந்து பிரிந்தான் ஞானபண்டிதன். அப்போது அவனுள் இரு விஷயங்கள் உருவாகியிருந்தன.

ஒன்று : பூவழகிக்குத் தனித் தபால் ஒன்றினை அனுப்ப வேண்டும்.

இரண்டு : சோமசேகர் — பெரியவர் — தன்னுடைய சொந்தத் தந்தையா இல்லையா என்ற பிரச்னைக்குஒரு முடிவு கட்ட வேண்டும்!...

இவ்விதமான இரு நினைவுகளினூடே அவன் ‘செந்தில் விலாசத்தை’ அடைந்த போது, இருள் விலகி, ஒளித்தடம் விரிந்திருப்பதைக் கண்டான்.