12
கடிதம் விடுதூது !
சிகாகோவிலிருந்து வந்திருந்த விமானத் தபால் ஞானபண்டிதனுக்கு அத்யந்த நண்பர் எழுதியது. சேமநிதி கிட்டினமாதிரி அவனுக்குக் களிப்பு ஏற்பட்டது.
சிகாகோ நண்பரின் நாமம் ; ரோட்ரிகஸ் ஜூனியர். பெரும் பணக்காரக் குடும்பம். நம் கணக்கில் ஒரு கோடிக்குச் சேரும். அப்படிப்பட்ட பணக்காரர் வீட்டுச் செல்லப்பிள்ளை, மிடில்டவுனைச் சேர்ந்த சுரங்கமொன்றில் அலுவல் பார்த்த ஒரு கூலிப் பெண்ணைத்தான் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டிருந்தான். “காதல் என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வு என்கிற கட்டுத்தளைகளை எப்படி அறுத்தெறிந்து விடுமோ அதே மாதிரி அன்பு என்கிற நேசத்தின் கட்டுத்தளைகளுக்கெல்லாம் அடங்கிக்கிடக்கும் வினோதப் பண்பும் காதல் சக்திக்கு உண்டு ! ”
ஞானப்பண்டிதனுக்காகவே வரம்பறுத்துச் சொல்லப்பட்ட சித்தாந்தமோ அது ? — எது எப்படி இருந்தாலும் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற கோட்பாட்டின் பொதுக்குறிப்பில் ஒரு முக்கிய கிளையாக அவன் காதலை அன்பு பூர்வமாக மதித்திருந்தான். அதே சமயம், அந்தக் காதலுக்கு ஒரு சமுதாய நீதியின்பாற்பட்ட தார்மீகமான அந்தஸ்தும் தன்னிறைவுக்கு உகந்த ஒரு மனச்சாந்தியும் உண்டாவதையும் அவன் விரும்பினான். அப்படிப்பட்ட ஒரு சுழல் உருவாவதற்காக, அவன் அந்தப் பெண் பூவழகியை அடைய வேண்டுமெனவும் ஆசைப்பட்டான்.
“எந்நேரமும் உன் சந்நிதியில் நான் இருக்க வேணும்
ஐயா !”
என்ற கோபால கிருஷ்ண பாரதியின் தேவகாந்தாரி ராகப்பாடல் ரேடியோவில் அற்புதமாகப் பாடப்பட்டது.