பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

குறைவோ உண்டாவதாக நான் கருத மாட்டேன். நீங்களும் கருதக்கூடாது.

‘நீங்கள்’ என்று அழைப்பது எனக்கு அவ்வளவு இயல்பான அன்புடன் ஒலிப்பதாகத் தோன்றவில்லை. உங்களுக்கு — அல்ல, உனக்கு — இந்த ‘உனக்கு’ என்பதில் ஒர் ஆனந்தம் எனக்கு உண்டாவதைப் போல உனக்கும் உண்டானால் இப்படியே அழைக்க இனிமேல் நான் தயார் !...

கடிதம் நீள்கிறது.

உன்பால் நான் பூண்டிருக்கக்கூடிய காதலைப் போல நீயும் என்பால் காதல் கொண்டால் — நேசம் கொண்டால் — பிரியம் கொண்டால் — உன்னை நான் என் பங்களாவில் நேரில் எதிர் பார்க்கிறேன்.

இல்லையேல், ஒரு வரிக் கடிதம் போதும். அப்பால் உனக்கு — அல்ல, உங்களுக்கு — என் நன்றி மனிதாபிமானத்துடன் காத்திருக்கும்,


அன்புள்ள,
எஸ். ஞானபண்டிதன் !
‘எஸ்’ என்ற விலாச எழுத்தைக் கிறுக்கிவிடத் துடித்தான். பிறகு அவ்வாறு செய்யவில்லை. கடிதத்தை ஒட்டினான். விலாசம் எழுதினான். தயாராக வெளிப்புறம் நின்ற பணியாள் பையனிடம் மேற்படி கடிதத்தைக் கொடுத்து, அடையாளம் சொல்லி, பணத்தையும் கொடுத்தனுப்பினான் அவன்.

காலை வெய்யிலை மிதித்தவனாக வேலைக்காரப் பையன் நடந்தான்.

பரீட்சை முடிவுக்காகத் துடித்துக்கொண்டிருக்கும் பட்டப்படிப்பு மாணவனாக இருந்த நிலையை மீண்டும் அடையலானான் ஞானபண்டிதன்.