123
இருக்க வேணும். அது நீதியின் தர்மம் !...கடவுளே ! செந்தில் வேலா!...” என்று உணர்ச்சிச் சுழிப்புடன் சொன்னார் அவர்.
அவன் மெளனமாக இருந்தான். அவர் பேச்சு அவன் கண்களையும் கலங்கடித்துவிடத் தவறவில்லை. பிறகு, முரட்டுப் போக்கிரி, ‘சோமசேகர் உன் சொந்தத் தந்தையா !’ என்று சவால் கேள்வி விடுத்ததை விஸ்தரித்தான்.
“பிறத்தியான் ஒரு புரளியைக் கிளப்பினால் அதற்காக இப்படியா நீ பேதலிப்பது ?...அவன் ஒரு பாவி ! பகவான்தான் அவனுக்கு நல்ல புத்தி காட்ட வேணும். சே ! அவன் மிருகம், மனித மிருகம் !” என்று நொந்தார்.
பின்னர், என்ன நினைத்தாரோ, விசும்பத் தொடங்கிவிட்டார் அவர். எழுந்து, மகாத்மா காந்திஜியின் படத்தின் முன் கைகளைக் கூப்பி நின்றார். “அண்ணலே. ! என்ன சோதனை இது ?” என்று கதறிக் கண்ணீர் வடித்தார். பிறகு, நாற்காலியில் வந்து குந்தினார். “நான் உன் தந்தை என்பதை நான் எப்படி அப்பா நிரூபிப்பேன் ? ஐயையோ! நான் எப்படிப்பட்ட துர்ப்பாக்கியசாலி ஆகிவிட்டேன் ! ஐயோ !” என்று மீண்டும் விம்மலானார்.
“அப்பா ! நீங்கள் தான் என் அப்பா ! நான் நம்பாவிட்டால் தானே நீங்கள் இப்படிப் புலம்ப வேண்டும்?” என்று சமாதானப்படுத்தினான்.
சோமசேகர் ஐந்து நிமிஷங்கள் சென்று, முகத்தைத் துடைத்துக்கொண்டார். “சரி, சாப்பிடுவோம் !” என்றார்.
உணவு உண்டார்கள்.
என்னவோ, மனம் அமைதியைப் பற்றிக்கொண்டாற் போல ஞானபண்டிதன் உணர்ந்தாலும், அம்மனத்திலே அமைதியின் ஆட்சிக்கான தடயம் காணப்படவில்லை என்பதையும் அவன் உணரவே செய்தான் !
படம் ஆரம்பிக்கப்பட்டது.
பூவழகியைப் பூங்காவில் சந்தித்த போது தன்னுடைய நிரபராதித்தன்மையை — தன் தூய்மையை — தன் விழிநீரின் சாட்சியுடன் ஸ்தாபிதம் செய்துகாட்டிய அந்தப் பரிசுத்தத்தை, இப்போது துணைக்கு அழைத்தபடி, அந்த நிம்மதியின் கனி