பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

“விஜயா, உங்க அத்தானையும் உட்காரச் சொல்லுங்க!” என்றாள் மல்லிகா.

“உட்காருங்க அத்தான்!” என்று சிவஞானத்தை நோக்கிச் சொன்னுள் விஜயா.

சிவஞானம் சிரித்தபடி, “உன் கணவரை உட்காச் சொல்கிறாள் என் மல்லி, சாப்பிட!” என்று விளக்கினன்.

சபேசன் கைக்குட்டையால் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

பேஷ்! திருமணத்துக்குப் பிறகும்கூட அந்தத் தம்பதிகளால் சிரிக்க முடிகிறதே! நல்ல ஜோடிகள் இவர்கள்!...

விருந்தில் கனிந்த அந்நினைவின் பழங்காட்சியை சிவஞானத்திடமிருந்து ‘சடக்’ என்று பிரித்தது அவனது குழந்தையின் அழுகைச் சத்தம். “அழாதேடா ராஜா!” என்று கெஞ்சி, குழந்தையின் பட்டுச் சொக்காயின் முதுகுப்புறத்தைத் தடவிக் கொடுத்தான். குழந்தை சலனம் கண்டது போலவே, அவனது உள் மனமும் சலனம் கொண்டது. இந்த அழகு மாளிகையின் அன்புத் தரிசனம் சற்ற முன் கிட்டியதிலிருந்து அவனுக்கு இதே நிலை பல முறை பல நிலைகளில் ஏற்பட்டுவிட்டது. முன்னைப் போலவே இப்போதும் அவன் தன்னை-தன் கண் கலக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால், அவன் தன்னுடைய, நெஞ்சின் தவிப்பையும் ஏக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அண்ணாச்சி!” என்ற அழைப்போசை சிவஞானத்தின் இதயத்தில் பாசப்பிரவாகத்தை உண்டுபண்ணியது.

ரிக்ஷாக்காரன்தான் அப்படிக் கூப்பிட்டான்.

“அண்ணாச்சி!” என்ற அந்தப் பாசத்தின் குரலுக்குத்தான் எவ்வளவு சக்தி! ...

“என்னப்பா?”

“இந்தக் குழந்தை...?” என்று கேட்டுவிட்டு, கேட்ட கேள்வியை அந்தரத்தில் நிறுத்திவிட்டு, ஏனோ அப்படியே நின்றான் ரிக்ஷாக்காரன்.

“இந்தக் குழந்தை என்னுடையது!” என்று பதிலளித்தான் சிவஞானம். ரிக்ஷாக்காரனது ஐயப்பாட்டை அனுமானம் செய்தவனாக வைத்த மறுமொழி இது.