பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14


செங்கோடன் – பேய் !

ழமொழி ஒன்று உண்டு :

‘மனத்துக்கு மனம்தான் சாட்சி ; மற்றதற்குத் தெய்வந்தான் சாட்சி !’

வாஸ்தவம்தான் !...

காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ஆயிரம் விளக்குப்பகுதி அவன் மனத்தில் ஆயிரம் வகைப்பட்ட சிந்தனைகளை உண்டாக்கி, வர்ண ஜாலம் செய்துகொண்டிருந்தது. மனத்திற்குத்தான் ஆயிரம் இதயங்கள் உண்டே !

‘எல்லாம் சரி. இந்த ஸ்கவுண்ட்ரல் செங்கோடன் பெரிய ஆள்தான் ! இல்லேன்னா, ரெளடின்னு பேர் எடுக்க முடியுமா, அதுவும் இந்த மெட்ராஸிலே !... ம்... வரட்டும், வரட்டும் ! எஸ்... அப்படியும்கூட செய்திருப்பான் அவன் ! பூவழகி விஷயமாய் இந்நேரம் பெரியவர் காதுக்குக்கூட விஷயத்தை எட்டிடச் செஞ்சுமிருப்பான்! அது அப்படி நடந்தாக்கூட நல்லது தான் !...நான் பூவழகியை லவ் பண்ணுற சங்கதியை அவர் நேரிடையாகவோ, இல்லாட்டி மறைமுகமாகவோ தெரிஞ்சுக்கிடுறது சிலாக்யந்தான். அப்பதான், குழலியையும் என்னேயும் வச்சு முடிச்சுப்போடுற விஷயமாய் ஏதாவது யோசிச்சிருந்தால் அதுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆமாம் !...’ மனம் சிலந்தி வலை பின்னியது.

இப்படிப்பட்ட சிந்தனைகளைச் சுமந்தவாறு ‘ஹோட்டல் ஸ்வே’யில் ஒரு சூடான சாயாவைக் குடித்துவைத்தான். ‘பிளேயர்ஸ்’ புகை பற்றத் தொடங்கிவிட்டது. அந்தப் புகையை அவன் நெஞ்சைத் தாக்க அனுமதிக்க மாட்டான்.

அவனுக்குச் சகலமும் தெரியும்.