பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வண்டியில் கடைசிப் புகையைக் கக்கி நிரப்பிவிட்டவனாக உள்ளே குந்தினான். காரை ‘ஸ்டார்ட்’ செய்ய முனைந்த நேரத்தில், “ஸார்” என்ற குரல் கேட்டது.

அங்கே பூவழகி நின்றாள். மான் விழி தாழ்த்தி, மையல் விழி நிமிர்த்தி, அன்பும் பண்புமாக ஒர் உருவம் பூண்டு, புன்னகையின் புது நிலவாக நின்றாள் பூவழகி. அவள் பூவின் அழகியோ ? பூவுக்கு அழகியோ ?

அவள் அழகுக்கு எல்லாம் தெரியும் !

பூவழகியைக் கண்டதும், தேவதை விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. விழிக்கரைகளில் புளகிதம் நீராக உருக் காட்டியது. இதழ்க்கரைகளில் இன்பம் ஈரக்கசிவின் வனப்புப் பெற்றது.

“ஏறிக்கொள்ளுங்கள் !...”

“பரவாயில்லை !...”

தான் அவளுக்கு அனுப்பிய காதல் தூதுக் கடிதம் நல்ல பதிலாக இவள் உருவம் பூண்டு வந்திருப்பதாகவே அவன் ஊகம் செய்தான்.

அவள் ஏனோ தயங்கினாள். “நீங்க ஷோவுக்கு ஆனந்த் தியேட்டருக்குப் போயிருப்பதாகப் போனில் சொன்னாங்க. அதான் தேடி வந்தேனுங்க !” என்றாள். அவள் பேச்சின் தன்மையிலிருந்தும் தயக்கத்திலிருந்தும் இன்னும் ஏதோ சொல்ல வேண்டுமென்று துடிப்பதும் தெரியவந்தது.

“பேசிக்கொண்டே வீட்டுக்குப் போகலாமே ! வாருங்கள் !” \

“இப்படிப்பட்ட மரியாதைப் பேச்சை என்னால் தாங்க முடியாதுங்க. சும்மா ஏக வசனத்திலேயே பேசுங்க. உங்களுக்கு நான் சின்னவள் !” என்று ‘உணர்ந்து’ பேசி, ஒரு வேண்டுகோளையும் அவனிடம் சமர்ப்பித்தாள்.

தன்னுடைய கடிதத்தில் தான் எழுப்பியிருந்த ஒரு திட்டத்துக்குத்தான் அவள் இப்போது தன் வாய்மொழியாக ஒரு பதிலைச் சொல்லுகிறாள் என்று அவன் அனுமானம் செய்யவும் தயாரானான். அவளும் தன்னைப் போலக் காதலுக்கு இலக்காகும் பட்சத்தில், இருதரப்பிலும் காதல் இணங்கிவரும் போது, அவளை அவன் ‘நீ’ என்று ஏக வசனத்தில் அழைக்கத்