பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அந்நேரத்தில் அங்கே பெரியவர் சோமசேகர் தோன்றினார். ஞானபண்டிதனையும் பூவழகியையும் அவர் தம் பார்வையால் அளந்தார்.

சுய நினைவு எய்திய ஞானபண்டிதன் தன் கைகளை உதறினான். ஆனால், அதற்குள் அக்கைகளை விலக்கி, தன்னை விடுவித்துக்கொண்டு நின்றாள் பூவழகி.

“அம்மா, நீ யாரு ?”

“ஐயா, நான் அனாதங்க... ஊர் பேர் இல்லாத அனாதைங்க... இந்த அனாதையைத் தெய்வம் சோதிக்குதுங்க... இது அந்தத் தெய்வத்துக்கே அடுக்காதுங்க ...” என்றாள் அவள், மெலிந்த தொனியில்.

“நல்லாப் பேசுறே அம்மா நீ, உன் பேர்தான் பூவழகியோ ?” என்றார் அவர்.

“ஆமாங்க !...” என்று அதிசயக் குறிப்பு மிளிர பதில் மொழிந்தாள் கன்னி.

“தெய்வத்துக்குச் சோதிக்கிற வேலை இல்லேன்னா, அப்புறம் அன்பு, பாசம், நேசம் என்கிற தத்துவங்களுக்கு ஒரு மகிமை உண்டாகாதேம்மா !...” என்றார் பெரியவர்.

அவரை வியப்பு விரிய நோக்கினான் ஞானபண்டிதன். அவர் பேச்சின் தாத்பரியம் தனக்குச் சார்புடையதாகத் தெரிந்தது. அவர் தம் கையில் ஏதோ நூல் வைத்திருந்தார்.

கசன் - தெய்வயானையின் கதை நூல் அது. குழலியின் தோட்ட வீட்டில் அல்லவா அது இருந்தது ?

“தம்பி, இந்தப் பொண்ணுக்கு நம்ம ‘விருந்தினர் ஹாலை’ ஏற்பாடு செஞ்சு கொடுக்கச் சொல் !... நீ போய்ச் சாப்பிட்டிட்டு ஒய்வெடுத்துக்கம்மா. விடியட்டும்... ! எல்லாத்துக்கும் நல்ல பொழுது விடியும் !...” என்று சொல்லிவிட்டு, விரைந்தார் அவர்.

‘விருந்தினர் ஹாலை’ அவன் பூவழகியுடன் அடைந்த போது, அங்கே குழலியும் அவன் தாயான அன்னபாக்கியத்தம்மாளும் ஏற்கெனவே விருந்தினர்களாக நிறைந்திருந்தார்கள் !