உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

“அது குழலியின் மனசிலே இருக்குதுங்கப்பா !”

“அதோட மனசு ?”

“அது உங்க தீர்ப்பிலே இருக்குமுங்க அப்பா !” என்று மெளனமானான் அவன்.

“நோ...நோ !... அப்படியெல்லாமில்லே !... என்னோட உயிர்ச்சிநேகிதரோட மகள் உன் வசம் ஒப்படைச்சிட்டால் அது என் நன்றிக்கும் என்னுடைய ஆத்ம திருப்திக்கும் சரியாயிருக்கும்னுதான் யோசிச்சிருந்தேன், ஒரு காலத்திலே !ஆனா, வரவர என்னோட மனசே ஒரு விதமாய் மாறி வந்துக்கிட்டிருக்குது !... அதோட, பெரிய அதிசயம் ஒண்னும் ராத்திரி நடத்திட்டுது. பூவழகி தான் இருந்தா, குழலியோட காதல் பலிதமடையாதின்னு நெனச்சு, உனக்கு ஒரு கடுதாசியை எழுதி வச்சுப்பிட்டு, தலைமறைவாய் மறைஞ்சிடத் திட்டமிட்டிருந்திருக்குது. இதை எப்படியோ புரிஞ்சுக்கிட்ட குழலி, உடனே எங்கிட்டே வந்து, தன் சிநேகிதியின் வாழ்க்கையை நல்லபடியாச் செம்மைப்படுத்துவதே தன் லட்சியக் கனவுன்னு சொல்லி, உன் இலட்சியக் கனவுப் பிரகாரமே பூவழகியை உனக்கே கல்யாணம் செஞ்சுவைப்பதே தன் முதல் அலுவல்னும் சொல்லிச்சு. காதலுக்காக ஒருத்தியோட ஒருத்தி மல்லுப் பிடிக்கிற லோகத்திலே, ஒருத்திக்காக ஒருத்தி மல்லு கட்டிக்கிட்டுத் தியாகம் செய்யத் துடிக்கிற ஒரு அதிசயமான உண்மையை — ஒரு உண்மையான அதிசயத்தை இப்பத்தான் இவ்வளவு வயசுக்கப்புறம் நேருக்கு நேராகக் கண்டுக்கிட்டேன்'...” என்று கூறினார் அவர் .

பிறகு, பூவழகியைத் தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் வம்பு வரும் என்று உருட்டிய செங்கோடனின் பேச்சுக்களை அவரிடம் அவன் ஞாபகமூட்டினான்.

தமக்கும் அது பற்றி சற்று முன் டெலிபோனில் பயங்காட்டிய விவரத்தையும் சொன்னார் அவர்.

யாரோ ஒரு பணக்காரர் இலங்கைச் சீமையில் யாரையோ தன் சிநேகிதரைக் கொலை செய்த போது, வேலையாளாக அவ்விடம் இந்த செங்கோடன் இருந்ததாகவும், அந்தக் கொலையாளி இப்போது சென்னையில் இருப்பதாயும், அவரைப் பழைய நிகழ்ச்சியை வைத்து உருட்டி மிரட்டிப் பணம்