பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


“அது புரிஞ்சிட்டுதுங்க. ஆனா, இந்தக் குழந்தையோட அம்மா...?” என்று இரண்டாந்தடவையாகத் தயங்கலானான் அவன்.

அவன் கேட்டு வாய் மூடவில்லை.

அதற்குள் குழந்தை வாய் திறந்து மீளவும் அழ ஆரம்பித்தது.

“குழந்தை சதா அழுதுகிட்டிருக்கிறதிலேருந்து உனக்கு உண்மை புரியலையாப்பா?... இதோட அம்மாவை விதி காணாமல் அடிச்சிருச்சுதப்பா !... நானும் ‘இது’வும் அழத் தொடங்கி ஒரு மாசம் ஆகப் போகுது. ஆனா, விதியோ எங்களைக் கண்டு சிரிச்சுக்கினு இருக்குது!...” நாத் தழுதழுக்கக் கூறினான் சிவஞானம். அவனிடம் கண்ணீர் இருந்தது. குழந்தையை அமைதிப்படுத்த முயன்றான் அவன். கண்ணீர் பீறிட்டது.

அதே கண்ணீர் அந்த ஏழையிடம் இருந்தது.

‘மல்லி !’— சிவஞானம் மனம் அதிர்ந்தான்.

எதை நினைப்பான் ? எதை மறப்பான் ?

“அண்ணாச்சி, இங்கிட்டுப் பெட்டியைத் தாங்க. நீங்க பிள்ளையைப் பத்திரமாய் வச்சுக்கிடுங்க. ஊம், நடங்க !” என்றான் ரிக்ஷாக்காரன்.

குழந்தை இப்போது சிரித்தது !

அந்திமாலைக்கென்று மயக்கசக்தியா, என்ன ?...

அச்சக்திதான், தஞ்சை மண்ணுக்கு வாய்த்த வரலாற்று மகிமையோ?...