பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

அபகரிப்பதாகவும் கேள்விப்பட்டதைச் செப்பினான் ஞான பண்டிதன்.

“அப்படியா ?” என்ற ஒரு வியப்பு வினாவுடன் முடித்து விட்டு, புறப்பட்டார் சோமசேகர். “இம்மாதிரிப் பயல்களையெல்லாம் கம்பி எண்ண வைக்க வேணும் !” என்றும் அவர் உக்கிரத்துடன் உறுமினார்.

“ஆமாம்,” போட்டான் ஞானபண்டிதன்.

டயர் தொழில் விஷயமாக புது டில்லிவரை நாளை போக வேண்டுமென்கிற செய்தியைப் பெரியவரின் செவிகளிலே போட்டான் ஞானபண்டிதன். அப்படியே, வாஷிங்க்டன் ரோஜவையும் சந்தித்து, அவள் கடிதப்படி சில நிமிஷம் உரையாடி மகிழவும் செய்யலாமென்றும் உள்ளூர எண்ணமிட்டான் அவன்.

இருவரும் தண்டையார்ப்பேட்டைக்குப் புறப்பட்டு ஹாலைக் கடந்தனர்.

அப்போது சோமசேகரின் பார்வையில் ஏதோ ஒரு தாள் காற்றில் பறந்து விழுந்தது. அதைப் பார்த்தார். அவர் கைகள்நடுங்கின. மறுகணம் ‘சிகரெட் லைட்டரை’ப் பொருத்தி அந்தத் தாளைப் பொசுக்கினார்.

அவன் அக்காட்சியைப் பார்த்தபடியே நின்றான்.

டெலிபோன் அழைத்தது.

எடுத்தான்.

எத்தன் செங்கோடன்தான் பேசினான்.

“இப்படிக் கொடு !” என்று வாங்கினார். “பணந்தானே ? எதற்கு ?... ஒரு பைசா இனி பெயராது !...ம்.நன்றாக உன் இஷ்டப்படி கிட !...ஞானபண்டிதனுக்கு நான் அவனுடைய சொந்த அப்பா இல்லை என்கிற ரகசியம் தெரிஞ்சிட்டுது ! இதோ, அவனும் பக்கத்திலேதான் இருக்கான் ! பூவழகிக்கும் அவனுக்கும் மாரேஜ் ஜாம் ஜாம்னு நடக்கப்போகுதாக்கும் ! ஒழுங்கா வந்து, ஒரு வெட்டு வெட்டிட்டுப் போ !...” என்றார்.

“ஒ.வெட்டிட்டுப் போறேன், கட்டாயமா !” என்று எதிர்த் தரப்பில் செங்கோடன் வறட்டுத் திமிர்ச்சிரிப்புடன் முழங்கிய குரல் தெளிவாகக் கேட்டது.